தேவையின்றி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல்
நீலகிரி மாவட்டத்தில் தேவையின்றி வௌியே சுற்றினால் கட்டாயம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் தேவையின்றி வௌியே சுற்றினால் கட்டாயம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
வாகன நடமாட்டம்
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. காய்கறி, பழங்கள் போன்றவற்றை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள், மருத்துவ தேவைகளுக்காக செல்கிறவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேவை இல்லாமல் வெளியே வாகனங்களில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
முழு ஊரடங்கு அமலுக்கு வந்தும் ஊட்டியில் நேற்று காலையில் வாகன நடமாட்டம் அதிகமாக இருந்தது. ஊட்டி சேரிங்கிராசில் போலீசார் தடுப்புகள் வைத்து வாகன சோதனை நடத்தினர். அப்போது அரசு ஊழியர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து சென்றனர்.
தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றிய நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருப்பினும் காலை 11 மணி வரை வாகன நடமாட்டம் இருந்ததால் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலெக்டர் அலுவலக சந்திப்பு, சேரிங்கிராஸ் சந்திப்பு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று வாகன சோதனை நடத்தினார்.
சரக்கு வாகனங்கள் மற்றும் அவசர மருத்துவ தேவையை தவிர பிற வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என்று போலீசாரிடம் தெரிவித்தார். அப்போது காய்கறி கொண்டு செல்லும் சரக்கு வாகனம், கொரோனா தடுப்பு பணி என ஸ்டிக்கர் வாகனங்கள் மீது ஒட்டப்பட்டு இருந்தது.
விசாரித்தபோது அது உண்மையில்லை என தெரிய வந்தது. உடனடியாக அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கலெக்டர் இ-பதிவு இல்லாமல் வந்த வாகனங்களை திருப்பி அனுப்பியதோடு, அடையாள அட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாகனங்கள் பறிமுதல்
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, முழு ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுரை வழங்கி உள்ளார். அதன்படி நீலகிரியில் தேவையில்லாமல் வெளியே சுற்றும் வாகனங்கள் கட்டாயம் பறிமுதல் செய்யப்படும்.
தொற்று பாதிப்பு அதிகரித்து ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் அபாயம், படுக்கைகள் நிரம்பி வழிகிறது. இதனை மக்கள் இன்னும் புரியாமல் உள்ளார்கள். முழு ஊரடங்கை மீறி வெளியே வாகனங்களில் வந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.