குமரியில் ஒரே நாளில் 17 வீடுகள் சேதம்

தொடர் மழையால், குமரியில் ஒரே நாளில் 17 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

Update: 2021-05-24 19:58 GMT
நாகர்கோவில்:
தொடர் மழையால், குமரியில் ஒரே நாளில் 17 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 50.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தொடர் மழை
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரியில் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் வடக்கு அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக குமரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது.
நாகர்கோவில், பூதப்பாண்டி, கொட்டாரம், குழித்துறை, மயிலாடி, ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. 
வாழை மரங்கள் மூழ்கின
தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள தென்னை மற்றும் வாழை போன்றவைகளை பயிரிடும் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளன. குறிப்பாக திற்பரப்பு, திருவரம்பு, இட்டகவேலி, கல்லாம்பொற்றை ஆகிய பகுதிகளில் ஏராளமான வாைழ, ரப்பர், மரவள்ளி கிழங்கு ேதாட்டங்களில் மழைநீர் தேங்கியதால் பயிர்கள் சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
குலசேகரம் அருகே பம்பச்சை பகுதியில் வெண்டலிகோட்டில் இருந்து  மலைவிளை செல்லும் சாலை உள்ளது. தொடர்ந்து பெய்த கனமழையால் சாலையையொட்டி உள்ள கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மர் தாங்கிய மின்கம்பங்களும் அரிப்பு ஏற்பட்டு அபாய நிலையில் உள்ளது. இதனால் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மலையோர மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளன. பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால், அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். கோதையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் வள்ளியாறு, பரளியாறு, பழையாறுகளிலும் வெள்ளமாக தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
மழை அளவு
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 50.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை- 14, சிற்றார் 1- 49, பூதப்பாண்டி- 7.4, களியல்- 28, கன்னிமார்-6.2, மயிலாடி- 6.2, கொட்டாரம்- 4.8, குழித்துறை -32.2, நாகர்கோவில்- 7, புத்தன் அணை-48.8, சிற்றார் 2- 47, சுருளோடு- 4.6, பாலமோர்- 13.6, மாம்பழத்துறையாறு- 17, ஆரல்வாய்மொழி-10, கோழிபோர்விளை- 35, அடையாமடை- 16, முள்ளங்கினாவிளை- 18, ஆனைகிடங்கு- 17.2, முக்கடல் அணை-12 என பதிவாகி இருந்தது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலை 43.50 அடியாக இருந்தது. அணைக்கு 2226 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மதகுகள் வழியாக 473 கனஅடி தண்ணீரும், உபரி நீராக 1708 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 66.60 அடியாக உள்ளது. அணைக்கு 1139 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சிற்றார் 1 அணையின் நீர்மட்டம்14.99 அடியாகவும், அணைக்கு 219 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார் 2 அணையின் நீர்மட்டம் 15.9 அடியாகவும் அணைக்கு 322 கன அடி தண்ணீர் வருகிறது. பொய்கை அணையின் நீர்மட்டம் 16.60 அடியாகவும், முக்கடல் அணையின் நீர்மட்டம் 14.80 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 43.96 அடியாகும், அணையில் இருந்து 36 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
வீடுகள் சேதம்
மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால், இதுவரை 128 வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 17 வீடுகள் இடிந்துள்ளது. அதாவது கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய தாலுகாக்களில் தலா 5 வீடுகள், அகஸ்தீஸ்வரம், கல்குளம், திருவட்டார் ஆகிய தாலுகாக்களில் தலா 2 வீடுகளும், தோவாளை தாலுகாவில் ஒரு வீடு சேதமடைந்து உள்ளது. இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 145 வீடுகள் சேதமடைந்துள்ளன.

மேலும் செய்திகள்