உயர்விளக்கு கோபுர கம்பத்தை தொட்ட மாணவன் மின்சாரம் தாக்கி பலி
உயர்விளக்கு கோபுர கம்பத்தை தொட்ட மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானான்.
திருமங்கலம்,மே.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தைச் சேர்ந்தவர், கணேசன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகன் யுவன் சரண் (வயது 11). இவன் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
தற்போது கொரோனா விடுமுறையையொட்டி ராயபாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தான். இவன் நேற்று அங்குள்ள மந்தை திடலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்குள்ள உயர் விளக்குக்கான கோபுர கம்பத்தை தொட்ட போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தான். அவனது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.