நாமக்கல்லில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம்
நாமக்கல்லில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.
நாமக்கல்:
கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. எனவே இதுகுறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தின் சார்பில் நாமக்கல் பஸ் நிலையம் அருகே கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அதன் உருவப்படம் சாலையில் வரையப்பட்டது. இந்த பணியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஓவியர்கள் சுமார் 20 பேர் ஈடுபட்டனர்.
அதில் முககவசம் அணிவோம், தடுப்பூசி போட்டு கொள்வோம், கொரோனாவை ஒழிப்போம் என்ற வாசகமும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாசகமும் இடம் பெற்று இருந்தன. இதேபோல் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு எமதர்மன் கொரோனா வடிவில் வருவது போன்றும், சேலம் ரோடு கார்னர் பகுதியிலும் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டு இருந்தது. இதுதவிர ஆங்காங்கே சாலையில் முககவச படமும் வரையப்பட்டு இருந்தது.