மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி 260 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை; கலெக்டர் மெகராஜ் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி 260 நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக கலெக்டர் மெகராஜ் கூறினார்.

Update: 2021-05-24 18:30 GMT
நாமக்கல்:
முழு ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் தடையில்லாமல் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
அதன் அடிப்படையில் நாமக்கல் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முழு ஊரடங்கு காலத்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள வாகனங்களை நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் இருந்து கலெக்டர் மெகராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
260 நடமாடும் வாகனங்கள்
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் சார்பில் 53 நடமாடும் வாகனங்களும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 40 நடமாடும் வாகனங்களும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் 40 நடமாடும் வாகனங்களும், வேளாண்மைத்துறையின் சார்பில் 20 நடமாடும் வாகனங்களும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 260 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கான காய்கறிகள் விவசாயிகள் மற்றும் பெரிய வியாபாரிகளிடமிருந்து பெற்று விற்பனை செய்யப்படும். வாகனங்களில் காய்கறிகளின் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டிருக்கும். அதனை பார்த்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக்கொள்ளலாம்.
36 கண்காணிப்பு குழு
மேலும் கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளை கண்காணிக்க தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் 36 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு செல்லும் பணியாளர்கள் தொழிற்சாலைகளின் வாகனங்கள் அல்லது அனுமதி பெற்ற பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. இந்த வாரத்தில் செயல்படுத்தப்படும் ஊரடங்கு மூலமாக தான் கொரோனா நோய்த்தொற்று பரவல் சங்கிலியை உடைக்க முடியும். இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது. தேவையின்றி சுற்றித் திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கை 500-ல் இருந்து 740 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக்கல்லூரியில் அமைக்கப்பட்ட சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் குறைந்த நோய்த்தொற்று மற்றும் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, தற்போது 47 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் 5 அல்லது 6 நாட்களிலேயே குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள்.
மருத்துவ பரிசோதனை
நாமக்கல் மாவட்டத்தில் 100 வீடுகளுக்கு ஒரு சுகாதார பணியாளர் அல்லது தன்னார்வலர் மூலமாக பொதுமக்கள் சுவை, வாசனை இல்லாமல் இருக்கிறார்களா? காய்ச்சல், சளி உள்ளதா?, உடல் வலி உள்ளதா? என்று கள ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் கடந்த 2 நாட்களில் 4,500 வீடுகளில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 10 நாட்களுக்குள் அனைத்து வீடுகளிலும் களஆய்வு பணிகள் முடிக்கப்படும். இதன் மூலமாக நோய்த்தொற்று முற்றிய ஆபத்தான நிலையில் நோயாளிகள் மருத்துவமனையில் சேர்வது தடுக்கப்பட்டு, அவர்கள் விரைவாக கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ராமலிங்கம் எம்.எல்.ஏ., நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்