அமலுக்கு வந்தது தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு: மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைப்பு சாலைகள் வெறிச்சோடின
தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையொட்டி கடலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கடலூர்,
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு உத்தரவு 24-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்காக 2 நாட்கள் அனைத்து கடைகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதன்படி கடந்த 2 நாட்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன.
இதில் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கடைகள் அடைப்பு
இந்நிலையில் நேற்று தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. கடலூரில் லாரன்ஸ் ரோடு, நேதாஜி ரோடு, இம்பீரியல் சாலை, பாரதி ரோடு, நெல்லிக்குப்பம் சாலை, திருவந்திபுரம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
மேலும் நகரின் முக்கிய இடங்களில் போலீசார் தடுப்பு கட்டைகள் வைத்து அடைத்து வைத்திருந்தனர். இதனால் வாகன ஓட்டிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. திருப்பாதிரிப்புலியூரில் உள்ள அனைத்து நகைக்கடைகள், பாத்திரக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட், கடலூர் உழவர் சந்தை ஆகியவையும் மூடப்பட்டன.
இதேபோல் பஸ், கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை.
வெறிச்சோடியது
இதனால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் சென்று வந்தனர்.மருந்து, நாட்டு மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் தடையின்றி செயல்பட்டன.அதிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே இருந்ததை பார்க்க முடிந்தது.
விருத்தாசலம்
விருத்தாசலத்தில் முக்கிய சாலைகளில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். லாரிகள் உள்பட அனைத்து வாகன ஓட்டிகளிடமும் விசாரணை செய்து பயணிக்க அனுமதித்தனர். ஆகையால் பல இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இதன் மூலம் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்கள் கடும் பாதிப்படைந்தனர்.
மேலும் விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமார், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதேபோல் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.