ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் தேவையின்றி சுற்றித்திரிபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுங்கள் போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் போலீசாருக்கு உத்தரவு
ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் தேவையின்றி சுற்றித்திரிபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுங்கள் என போலீசாருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவிட்டார்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூரில் ஆய்வு
தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. இதை கண்காணிக்க கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் நேற்று திருக்கோவிலூர் சந்தப்பேட்டை தீயணைப்பு நிலையம், திருக்கோவிலூர் 4 முனை சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாகன சோதனை சாவடியை பார்வையிட்டு அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பாரபட்சம் கூடாது
அப்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் அனைவரும் முதல் கட்டமாக தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்து கொண்ட பின்னரே பணியை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு 100 சதவீத முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. நகரில் தேவையின்றி சுற்றித்திரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். இதில் எவ்வித பாரபட்சமும் இருக்கக் கூடாது.
மருத்துவ தேவைக்காக
முக கவசம் மற்றும் ஹெல்மட் அணியாமல் மருத்துவ தேவைக்காக வந்தாலும் கூட வழக்குப்பதிவு செய்ய வேண்டும். முக கவசம் மற்றும் ஹெல்மட் அணிந்து மருத்துவ தேவைக்காக வருபவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்தால் அவர்களை நகருக்குள் போலீசார் அனுமதிக்கலாம் என்றார்.
அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.