பரபரப்பான கடைவீதிகள், தெருக்கள் வெறிச்சோடின

ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வில்லாத பொது ஊரடங்கு உத்தரவின் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் தெருக்கள், முக்கிய கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2021-05-24 17:23 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வில்லாத பொது ஊரடங்கு உத்தரவின் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் தெருக்கள், முக்கிய கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஊரடங்கு உத்தரவு
தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா 2-வது அலை பரவலை தடுக்கும் வகையில் அரசு கடந்த 10-ந் தேதி முதல் 2 வார காலத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் நேற்று 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ஒரு வார காலத்திற்கு தளர்வில்லாத முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 
அரசின் உத்தரவின்படி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் 2 நாட்களில் வாங்கி வைத்துக்கொண்டனர். இந்தநிலையில் தளர்வில்லாத முழு ஊரடங்கு தொடங்கியதையொட்டி நேற்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மக்கள் வெளியில் வராமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். 
வெறிச்சோடின
பலசரக்கு கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டு இருந்ததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைத்தெரு, அரண்மனை, பெரிய கடைவீதி, வண்டிக்காரத்தெரு, சிகில்ராஜவீதி, பவுண்டுக்கடை தெரு, யானைக்கல்வீதி, அரசு ஆஸ்பத்திரி ரோடு, கேணிக்கரை சந்திப்பு, ரெயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டதால் ராமநாதபுரம் பஸ் நிலையம் மக்கள் நடமாட்டமின்றி, கடைகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடைவீதிகள் தவிர இதர தெருக்கள், குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி மயான அமைதியாக காணப்பட்டது. தளர்வின்றி முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாலும் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் மக்கள் யாரும் வெளியில் வராமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். 
அச்சம்
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போலீசார் இருசக்கர ரோந்து வாகனங்களில் சுற்றி வந்து அரசின் உத்தரவினை மீறி வெளியில் யாரும் நடமாடாமல் கண்காணித்து வந்தனர். கொரோனா வைரஸ் அச்சம் மக்களிடையே அதிகரித்து வருவதோடு பலர் பலியாகி வருவதால் ஏற்பட்டுள்ள உயிர் அச்சம் காரணமாக வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
ஒருபுறம் மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வீடுகளில் முடங்கி கிடந்தாலும் ஒருசிலர் அதனை பொருட்படுத்தாமல் இருசக்கர வாகனங்களில் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் மறித்து எச்சரித்தபோது மருந்து வாங்க போவதாக கூறி சென்றனர். தங்களின் தேவைக்காக வெளியில் சென்றவர்கள் கூட தற்காப்பிற்காக காலியான சளி, காய்ச்சல் மருந்து பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு சென்றதை காண முடிந்தது. இதுபோன்றவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்