3 நாட்களில் 6807 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பொள்ளாச்சியில் நடந்த சிறப்பு முகாமில் கடந்த 3 நாட்களில் 6807 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கல்லூரி மாணவ- மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் நடந்த சிறப்பு முகாமில் கடந்த 3 நாட்களில் 6807 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கல்லூரி மாணவ- மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால் பலர் கொரோனா தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இதற்கு பொள்ளாச்சி நாச்சிமுத்து பிரசவ விடுதி சிறப்பு மையமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக தொழிலாளர்கள், சேவை துறையில் பணிபுரியும் நபர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அனைத்து தரப்பினரும் நாச்சிமுத்து பிரசவ விடுதிக்கு திரண்டு வந்தனர்.
கல்லூரி மாணவர்கள் ஏமாற்றம்
இதையடுத்து போலீசார், வருவாய் துறையினர், நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் அவர்களை சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நிற்க வைத்தனர். ஆண்கள், பெண்களுக்கு தனி, தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதற்கிடையில் கல்லூரி மாணவ-மாணவிகள் யாரும் வரிசையில் நிற்க வேண்டாம். உங்களுக்கு வேறு தேதியில் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வரிசையில் நீண்ட நேரம் நின்ற மாணவ-மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
6,807 பேருக்கு போடப்பட்டது
கடந்த 3 நாட்களாக சிறப்பு முகாம் நடத்தி கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதற்கட்டமாக தொழிலாளர்கள், டிரைவர்கள், சேவை துறைகளில் பணிபுரியும் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்படுகிறது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் நடந்த சிறப்பு முகாமில் முதல் நாள் 2,453 பேருக்கும், 2-வது நாளில் 2,159 பேருக்கும், 3-வது நாள் 2,195 பேருக்கும் சேர்த்து மொத்தம் 6,807 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு 2-வது கட்டமாக தடுப்பூசி போடப் படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.