கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற வேண்டும் குமாரசாமி வலியுறுத்தல்
கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை தனியார் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக பெற வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தலைவருமான குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது. இதற்கான மருந்துகளை வழங்குமாறு மத்திய அரசிடம் கர்நாடக அரசு கேட்டுள்ளது. ஆனால் பிற மாநிலங்கள் அந்த நோய்க்கான மருந்தை நேரடியாக இறக்குமதி செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
ஆனால் கர்நாடக அரசு இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது சரியல்ல. தெலுங்கானா மாநில அரசு, தனியார் மருந்து நிறுவனங்களுக்கு கடிதம் எழுதி, கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை வினியோகம் செய்யுமாறு கோரியுள்ளது. கன்னடர்கள் மீது பா.ஜனதா அரசுக்கு அக்கறை இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
வாரம் 400 பேரை இந்த கருப்பு பூஞ்சை நோய் தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். இந்த நோய்ககு தொடக்கத்திலேயே உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். ஆனால் இந்த அரசிடம் போதிய மருந்து கையிருப்பு உள்ளதா?.
ஆக்சிஜன், மருத்துவ படுக்கை, தடுப்பூசி தட்டுப்பாட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்துகளை பெறுவதில் சுதந்திரமாக செயல்பட வேண்டும். தனியார் மருந்து நிறுவனங்களிடம் இருந்து மருந்து பெற வேண்டும். மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.