18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் யார்-யாருக்கு முன்னுரிமை பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் விளக்கம்
18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் யார்-யாருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களுரு,
தேசிய சுகாதார திட்டத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள, நகரங்களில் உள்ள மக்கள் ஆன்லைன் பதிவு செய்திருக்க வேண்டும். கிராமப்புற மக்கள் நேரடியாக தடுப்பூசி மையங்களுக்கு வந்து பெயர்களை பதிவு செய்து போட்டுக் கொள்ளலாம். அதே தடுப்பூசி 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் நேரடியாக மையங்களுக்கு வரலாம்.
கோவேக்சின் தடுப்பூசி தற்போது வினியோகம் செய்யப்படுவது இல்லை. அதே நேரத்தில் கோவேக்சின் 2-வது டோஸ் போட்டுக் கொள்பவர்களுக்கு அவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும். அவர்களுக்கு ஒதுக்கப்படும் தேதியில் வந்து அந்த தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 18 வயதுக்கு மேற்பட்ட 44 வயதுக்கு உட்பட்ட பொதுவானர்களுக்கு தடுப்பூசி கிடைக்காது. அதே நேரத்தில் முன்னுரிமை பட்டியலில் உள்ள 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டோர்களில் யார்-யாருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் என்பது குறித்து பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சுகாதார பணியளர்கள், ஊடகத்தினர், நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகள், சிறைத்துறையினர், மயானங்களில் பணியாற்றும் ஊழியர்கள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு போக்குவரத்து ஊழியர்கள், ஆட்டோ-வாடகை கார் டிரைவர்கள், குடிநீர் வினியோகம் செய்யும் தொழிலாளர்கள், தபால்துறை ஊழியர்கள், தெருவோர வியாபாரிகள், காவலாளிகள், முதியோர்களை கவனித்துக் கொள்வர்கள், குழந்தைகள் காப்பக ஊழியர்கள், மருத்துவமனைகளுக்கு பொருட்களை வினியோகம் செய்பவர்கள், பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள்.
ஆக்சிஜன் வினியோகம் செய்பவர்கள், முதியோர் காப்பகத்தினர், ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்கள், வேளாண் விற்பனை மார்க்கெட்டில் பணியாற்றுபவர்கள், கட்டிட தொழிலாளர்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், விமானத்துறையில் பணியாற்றுபவர்கள், வங்கி ஊழியர்கள், திரைத்துறையினர், வக்கீல்கள், ரெயில்வே ஊழியர்கள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், வனத்துறை ஊழியர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், கெயில் ஆயில் நிறுவனத்தினர், மாநில, தேசிய விளையாட்டு வீரர்கள், எச்.ஏ.எல். ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.