பாந்திராவில் ரூ.1 கோடியே 18 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் மூதாட்டி உள்பட 2 பேர் கைது

பாந்திராவில் ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மூதாட்டி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-24 14:15 GMT
மும்பை, 

மும்பை பாந்திரா வாட்டர்பில்ட் சாலையில் போதைப்பொருள் விற்பனை நடந்து வருவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நடமாடிய ஒருவரை பிடித்து சோதனை போட்டனர்.

அப்போது அவரிடம் சரஸ் என்ற போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் பெயர் கிஷோர் காவ்லி (வயது57) என்பது தெரியவந்தது. மேலும் அவர் பாந்திராவில் வசிக்கும் மூதாட்டியிடம் இருந்து பொதைப்பொருளை வாங்கி விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தார்.

அவர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் மூதாட்டியான ஜோராபாய் சேக் (75) என்பவரின் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 கிலோ எடையுள்ள சரஸ் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 18 லட்சம் ஆகும்.

இதையடுத்து போலீசார் மூதாட்டி உள்பட கிஷோர் காவ்லியை கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்