அழுகிய நிலையில் 8 உடல்கள் மீட்பு கப்பல் விபத்தில் காணாமல் போனவர்களா? என்பது குறித்து விசாரணை
ராய்காட் மாவட்ட கடற்கரைேயார பகுதிகளில் அழுகிய நிலையில் 8 உடல்கள் மீட்கப்பட்டது. இவர்கள் ‘டவ்தே’ புயலில் எண்ணெய் துரப்பண கப்பல் விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மும்பை,
மும்பையில் ‘டவ்தே’ புயல் காரணமாக பி-350 எண்ணெய் துரப்பண கப்பல் சூறைக்காற்றில் அடித்து செல்லப்பட்டு கடலில் மூழ்கியது. அதேபோல அங்கு பணியில் ஈடுபட்ட வரபிரதா என்ற இழுவை படகும் மூழ்கியது. இந்த துயர சம்பவங்களில் சிக்கிய 274 பேரில் 188 பேர் மீட்கப்பட்டனர். மற்ற 86 பேர் மாயமானார்கள்.
இவர்களில் 66 பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. மேலும் காணாமல் போன மேலும் 20 பேரை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே ராய்காட் மாவட்டம் முருட் கிராமம் அருகே உள்ள கடற்கரையில் அழுகிய நிலையில் பிணங்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று கடலில் மிதந்து வந்த ஒரு உடலை மீட்டனர். பின்னர் நய்காவ் கடற்கரையில் 2 உடல்களும், கீம் கடற்கரை பகுதியில் ஒரு உடலும், அலிபாக் தாலுகாவில் உள்ள அவாஜ், மற்றும் திக்ஹோடே ஆகிய கடற்கரையில் கிடந்த உடல்கள் என சேர்த்து 8 உடல்கள் மீட்கப்பட்டது.
இது பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண சிரமம் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் அவர்கள் எண்ணெய் துரப்பண கப்பலில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.