சோலாப்பூரில் பண்ணை வீட்டில் கொத்தடிமைகளாக இருந்த 9 பேர் மீட்பு 2 பேர் மீது வழக்கு பதிவு
சோலாப்பூரில் உள்ள பண்ணை வீட்டில் கொத்தடிமைகளாக இருந்த குழந்தைகள் உள்பட 9 பேரை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜால்னா,
ஜல்னாவை சேர்ந்தவர் மரியா பாப்லு குலே(வயது40). இவர் உள்பட உறவினர்கள் என 11 பேர் அதிக சம்பளம் தருவதாக கூறி சோலாப்பூர் மாதா தாலுகா பைராக்வாடியில் உள்ள பண்ணையி்ல் கரும்பு வெட்டும் தொழிலாளியாக அழைத்து செல்லப்பட்டனர். இதன்பின்னர் கடந்த 2 ஆண்டாக அவர்களை வெளியே வரவிடாமல் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு பண்ணை மேற்பார்வையாளர் அவர்களை வேலை வாங்கி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி மரியா பப்லு குலேவின் தாய் மற்றும் உறவுக்கார பெண் ஆகிய 2 பேர் பண்ணை வீட்டில் இருந்து தப்பி சொந்த ஊரான ஜல்னா சென்றனர்.
பின்னர் அங்குள்ள போலீசில் நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்தனர். இந்த புகாரின் படி மாதா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இதில் கொத்தடிமைகளாக 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 9 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சம்பவம் குறித்து மாதா போலீசார் கொத்தடிமைகளாக வைத்த பண்ணை மேற்பார்வையாளர், மற்றும் அவரது மாமனார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது பற்றி ஜால்னா எம்.எல்.ஏ. கைலாஷ் கோரந்த்யால் கூறுகையில், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பாதிக்கப்பட்ட 9 பேரும் அங்குள்ள வீட்டில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.