காரில் கடத்தி மூதாட்டி கொலை
வட்டி பணத்தை கேட்டு அவமானப்படுத்தியதால் தூக்க மாத்திரை கொடுத்து மூதாட்டியை காரில் கடத்தி சென்று கொலை செய்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
பேரூர்
வட்டி பணத்தை கேட்டு அவமானப்படுத்தியதால் தூக்க மாத்திரை கொடுத்து மூதாட்டியை காரில் கடத்தி சென்று கொலை செய்த விவசாயி கைது செய்யப்பட்டார். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :-
மூதாட்டி
கோவையை அடுத்த ஆலாந்துறை அருகே வெள்ளிமலைப்பட்டினத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 60). இவர் பணத்தை வட்டிக்கு விட்டு வசூல் செய்து வந்தார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த விவசாயி வீராசாமி (48) என்பவர் ரூ.50 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார்.
ஆனால் அவர் வட்டி பணத்தை உரிய முறையில் திருப்பி கொடுக்க வில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி வீராசாமி, சுப்புலட்சுமியை செல் போனில் தொடர்பு கொண்டு பேசி வட்டி பணம் வாங்க வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார்.
அதை நம்பிய சுப்புலட்சுமி, வீராசாமியின் வீட்டுக்கு சென்றார். அங்கு உடல் வலி போவதற்கு ஒரு மாத்திரை இருப்பதாக கூறி சுப்புலட்சுமியிடம் தூக்க மாத்திரையை கொடுத்து உள்ளார்.
காரில் கடத்தி சென்றார்
அந்த மாத்திரையை வாயில் போட்டு தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் சுப்புலட்சுமி மயங்கினார். உடனே அவரை வீராசாமி தனது காரில் ஏற்றி பொள்ளாச்சிக்கு கடத்தி சென்றார்.
அங்கு பி.ஏ.பி வாய்க்கால் பகுதிக்கு கொண்டு சென்று சுப்புலட்சுமியின் கழுத்தை கயிற்றால் நெரித்து இரும்புக்கம்பியால் தலையில் தாக்கி தண்ணீரில் தூக்கி போட்டு விட்டு தப்பிச் சென்றார். முன்னதாக அவர், சுப்புலட்சுமி அணிந்திருந்த 6½ பவுன் தங்க நகையை பறித்துள்ளார்.
இந்த நிலையில் பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீரில் மூதாட்டி கிடப்பதை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மூதாட்டியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை பிரிவில் சுயநினைவின்றி இருந்த சுப்புலட்சுமி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விசாரணை
இது குறித்த புகாரின் பேரில் ஆலாந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கடத்தல், நகை பறிப்பு, கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த வழக்கில் குற்றவாளி யார்? என்று தெரியாத நிலையில் போலீசார் பலரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். இதில் மூதாட்டியிடம் கடைசியாக செல்போனில் பேசிய வீராசாமியிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர்.
இதில் அவர், சுப்புலட்சுமியை கொலை செய்தது தெரிய வந்தது. உடனே ஆலாந்துறை போலீசார் நேற்று வீராசாமியை கைது செய்தனர். அவர், தனது தோட்டத்தில் வெங்காய மூட்டையில் மறைத்து வைத்திருந்த 6½ பவுன் தங்க நகையை போலீசார் மீட்டனர்.
அவமானப்படுத்தினார்
கைதான வீராசாமி போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு :-
கடந்த மாதம் வட்டி பணம் வாங்குவதற்காக வீட்டுக்கு வந்த சுப்புலட்சுமி எனது குடும்பத்தினர் முன்னிலையில் என்னை கேவலமாக பேசினார்.
வட்டி பணம் தரமுடியாமல் நீ ஏன் உயிருடன் இருக்கிறாய். குடும்பத்துடன் தூக்கு போட்டு செத்து போக வேண்டியது தானே என்று கூறினார். இது எனக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தி யது. எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
அதன்படி, சுப்புலட்சுமிக்கு போன் செய்து எனது வீட்டுக்கு வரவழைத்தேன். பின்னர் அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து பொள்ளாச்சிக்கு காரில் கடத்தி சென்றேன். அங்கு கழுத்தை நெரித்து இரும்புக்கம்பியால் தாக்கி தண்ணீரில் தள்ளி விட்டு விட்டு எதுவும் தெரியாதது போல் வந்துவிட்டேன்.
சிக்கிக்கொண்டேன்
நான் தாக்கியதில் அவர் இறந்திருப்பார் என நினைத்தேன். ஆனால் வாய்க்காலில் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்ததால் அவர் உயிர் பிழைத்து விட்டார். ஆனாலும் அவர் கோமா நிலையில் இருந்ததால் என்னை காட்டி கொடுக்க முடியவில்லை. மேலும் நான் நினைத்தபடி அவர் இறந்து விட்டார்.
ஆனாலும் சுப்புலட்சுமியின் செல்போனில் நான் தொடர்பு கொண்டதன் அடிப்படையில் போலீசார் என்னை பிடித்து விசாரித்தனர். இதில் நான் அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி தகராறு செய்ததை தெரிந்து கொண்டு விசாரித்தனர். இதனால் நான் போலீசில் சிக்கிக் கொண்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்தார்.