சேலம் மாவட்டத்தில் புதிய உச்சம்: 966 பேருக்கு கொரோனா பாதிப்பு-15 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் புதிய உச்சமாக 966 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 15 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-05-23 22:21 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் புதிய உச்சமாக 966 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 15 பேர் பலியாகி உள்ளனர்.
புதிய உச்சம்
சேலம் மாவட்டத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 742 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் புதிய உச்சமாக 966 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 361 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நங்கவள்ளியில் 53 பேர், பனமரத்துப்பட்டியில் 45 பேர், தலைவாசலில் 41 பேர், ஓமலூரில் 38 பேர், ஆத்தூரில் 35 பேர், எடப்பாடியில் 34 பேர், தாரமங்கலத்தில் 32 பேர், வீரபாண்டியில் 35 பேர், சங்ககிரியில் 34 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 29 பேர், கொங்கணாபுரத்தில் 24 பேர், மகுடஞ்சாவடி மற்றும் மேச்சேரி பகுதியில் தலா 17 பேர் என உள்பட மாவட்டம் முழுவதும் கொரோனா நோய் தொற்றுக்கு 966 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
15 பேர் பலி
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 877 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் 5,683 பேர் கொரோனா பாதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 15 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 773 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்