அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்த மக்கள்
நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர். மேலும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஊட்டி,
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம், நேற்று ஆகிய 2 நாட்களில் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று ஒரு வாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. என்.சி.எம்.எஸ். மைதானத்தில் தற்காலிமாக செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்கள் வாங்க பொதுமக்கள் அதிகம் பேர் வந்தனர். கடைகளில் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நின்று வாங்கினர்.
ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு என்பதால் மக்கள் வழக்கமாக காய்கறிகள், பழங்கள் வாங்கும் அளவை விட அதிகமாக வாங்கினர். இதனால் உழவர் சந்தையில் 11 மணிக்கு முன்பாகவே காய்கறிகள் விற்று தீர்ந்தது.
அங்கு எல்லா காய்கறிகளும் கிடைக்காததால், ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் நகராட்சி மார்க்கெட்டுக்கு சென்றனர். அங்கு மளிகை, பலசரக்கு, காய்கறி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக நின்றதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
ஊட்டி நகர் மட்டுமில்லாமல் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் பலர் நான்கு சக்கர, இருசக்கர வாகனங்களில் வந்தனர். இதனால் சேரிங்கிராஸ் சந்திப்பு, கமர்சியல் சாலை, லோயர் பஜார், எட்டின்ஸ் சாலை, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்களை நிறுத்த இடமின்றி வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக காலை 10 மணிக்கு பிறகு கடைகள் அடைக்கப்பட்டது. அதன் பின்னர் சாலைகள் வெறிச்சோடின.
ஆனால் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதித்ததால் நேற்று பகல் முழுவதும் சாலைகளில் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருந்தது. தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்துவதை பயன்படுத்தி சில கடைகளில் காய்கறிகள், பழங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
தேநீர் கடைகள், பேக்கரிகளில் தின்பண்டங்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். சலூன் கடைகளில் முகசவரம், முடிதிருத்தம் செய்ய ஆண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் நேற்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தது.
இதனால் கூடலூர் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக மளிகை, காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட கடைகளில் மக்கள் முண்டியடித்தவாறு இருந்தனர். அவர்களை போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். மேலும் அனைத்து முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் காலை முதல் மதியம் வரை பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் அதன்பின்னர் வெளியூர்களில் இருந்து வரும் பஸ்களில் மட்டுமே பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
இதேபோன்று பந்தலூர் தாலுகாவில் உள்ள கொளப்பள்ளி, எருமாடு, சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோத்தகிரியில் உள்ள அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் இருந்தது. குறிப்பாக மீன், இறைச்சி கடைகளில் மக்கள் குவிந்தனர்.
இதனால் அங்கு சமூக இடைவெளி கேள்விக்குறியானது. மேலும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை சீர் செய்யும் பணியிலும், மக்களை கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.