இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; நெல்லையில் கடைவீதிகளில் குவிந்த பொதுமக்கள்
இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் நெல்லையில் நேற்று கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
நெல்லை, மே:
இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் நெல்லையில் கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர். ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், ஒருசில தளர்வுகளால் கொரோனா பரவல் குறையவில்லை.
இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. அரசின் இந்த உத்தரவில் காய்கறி, மளிகை கடைகளும் திறக்க அனுமதி கிடையாது. காய்கறிகளை அரசே விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்து இருப்பதாக கூறி உள்ளது.
எனினும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வசதியாக நேற்று முன்தினமும், நேற்றும் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
கடைவீதிகளில் மக்கள்
இதையொட்டி நெல்லையில் நேற்று பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர். டவுன், பாளையங்கோட்டை மார்க்கெட்டுகள், சந்திப்பு, மகாராஜநகர், தச்சநல்லூர், பேட்டை, மேலப்பாளையம் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அவர்கள் ஒரு வாரத்துக்கு தேவையான அரிசி, பருப்பு, மசாலா பொருட்கள் உள்ளிட்ட சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிச்சென்றனர். இதேபோல் மார்க்கெட்டில் ஒரு வாரத்துக்கு தேவையான அளவுக்கு காய்கறிகள், பழங்களை வாங்கிச் சென்றனர்.
மேலும் டவுன் மார்க்கெட், சாப்டர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி கடைகள், பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட், மகாராஜநகர், மேலப்பாளையம் உழவர் சந்தை பகுதிகள் மற்றும் தெருவோர காய்கறி கடைகளில் நேற்று ஏராளமான மக்கள் குவிந்தனர். அவர்கள் போட்டிப் போட்டு காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
சிலர் ஆடு, கோழி இறைச்சிகளையும், மீன்களையும் அதிகளவு வாங்கிச்சென்றனர். ஒரே நேரத்தில் பொதுமக்கள் குவிந்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதையொட்டி கடைவீதிகள், முக்கிய சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதிகமாக கூட்டம் காணப்பட்ட பகுதிகளுக்கு சென்று சமூக இடைவெளியுடன் நின்று பொருட்களை வாங்கிச்செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.