திசையன்விளையில் கருவாடு விலை கடும் உயர்வு
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு எதிரொலியாக திசையன்விளையில் நேற்று கருவாடு விலை கடுமையாக உயர்ந்தது.
திசையன்விளை, மே:
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு எதிரொலியாக, திசையன்விளையில் கருவாடு விலை கடுமையாக உயர்ந்தது.
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு ஒரு வாரத்துக்கு அமல்படுத்தப்படுகிறது. மருந்து கடைகள், பால் கடைகள் போன்றவை தவிர மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்படுகின்றன.
இதனால் நேற்று ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் ஒரு வாரத்துக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
திசையன்விளை பஜாரிலும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. திசையன்விளை அம்மா திருமண மண்டபம் எதிரில் அமைக்கப்பட்ட தற்காலிக மார்க்கெட்டிலும் மீன்கள், கருவாடு போன்றவற்றின் விற்பனை களைகட்டியது.
கருவாடு விலை உயர்வு
தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. புயல் எச்சரிக்கை காரணமாக நாட்டுப்படகு மீனவர்களும் கடந்த சில நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்களின் வரத்தும் குறைவாகவே காணப்பட்டது.
முழு ஊரடங்கில் இறைச்சி கடைகளும் மூடப்படுவதால், அசைவ பிரியர்கள் ஒரு வாரத்துக்கு தேவையான கருவாடுகளை மொத்தமாக ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதனால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
நேற்று முன்தினம் ரூ.150-க்கு விற்கப்பட்ட 100 எண்ணம் சாளை கருவாடு நேற்று ரூ.350 ஆக விலை உயர்ந்தது. இதேபோல நேற்று முன்தினம் ரூ.150-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நெத்திலி கருவாடு நேற்று ரூ.300 ஆக விலை உயர்ந்தது.