கடைகளில் பொருட்கள் வாங்க திரண்ட பொதுமக்கள்: நாமக்கல்லில் கடும் போக்குவரத்து நெரிசல்

முழு ஊரடங்கை முன்னிட்டு நாமக்கல்லில் பொருட்களை வாங்க திரண்ட பொதுமக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2021-05-23 18:33 GMT
நாமக்கல்:
போக்குவரத்து நெரிசல்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஊரடங்கை முன்னிட்டு நேற்று காலை முதல் இரவு 9 மணி வரை அனைத்து வகையான கடைகளும் திறந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையொட்டி நாமக்கல் நகரில் நேற்று காலையில் ஜவுளிக்கடைகள், இரும்பு கடைகள், வாகன உதிரிபாக கடைகள், சலூன் கடைகள், மளிகை கடைகள் மற்றும் காய்கறி, பழக்கடைகள் என அனைத்து விதமாக கடைகளும் திறக்கப்பட்டன. இந்த கடைகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் திரண்டனர். இதனால் நாமக்கல்லில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதர கடைகள் அடைப்பு
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூட அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் நகராட்சி அதிகாரிகள் காய்கறி, மளிகை மற்றும் பழக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர இதர கடைகளை அடைக்க அறிவுறுத்தினர். இதை தொடர்ந்து இதர கடைகள் அடைக்கப்பட்டன. அதற்கு பிறகு வாகன போக்குவரத்து நெரிசல் குறைய தொடங்கியது.
இருப்பினும் மளிகை கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது. இதேபோல் மருந்து கடைகள் முழு ஊரடங்கில் திறந்து இருக்கும் என அரசு அறிவித்திருந்தாலும், அவற்றிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இது குறித்து மருந்து வாங்க வந்த நபர்களிடம் கேட்டபோது நாளை (இன்று) மருந்து கடைகள் திறந்து இருந்தாலும், இருசக்கர வாகனங்களில் வருவதற்கு போலீசார் அனுமதிக்க மாட்டார்கள். எனவே தற்போதே தேவையான மருந்தை வாங்கி செல்கிறோம் என்றனர்.
அதிகாரிகள் ஆய்வு
இதற்கிடையே நகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு பகுதியாக சென்று கடைகளில் அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா ? என ஆய்வு செய்தனர். விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்