ராணிப்பேட்டையில் ஊரடங்கை முன்னிட்டு இரவிலும் நடந்த இறைச்சி வியாபாரம்
ராணிப்பேட்டையில் ஊரடங்கை முன்னிட்டு இரவிலும் நடந்த இறைச்சி வியாபாரம்
ராணிப்பேட்டை
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க இன்று (திங்கட் கிழமை) முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வில்லாத முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு வசதியாக, நேற்று முன்தினமும், நேற்றும் அனைத்து கடைகளும் திறந்து வியாபாரம் செய்ய அரசு அனுமதித்திருந்தது.
இதனால் ராணிப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் முதல் பெரும்பாலான கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தது. நேற்று பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு திரண்டு வந்து பொருட்களை வாங்கி சென்றனர். காய்கறி, மளிகை, இறைச்சி கடை உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் முன்பு பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டமாக திரண்டதால், சமூக இடைவெளியை பின்பற்றாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் கொரோனா தொற்று அதிகம் பரவும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
காய், கறிகள் அனைத்தும் ஊரடங்கை முன்னிட்டு விலை அதிகமாக விற்கப்பட்டது. மேலும் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் கூட பொதுமக்கள் இறைச்சி கடைக்கு வந்து கோழி இறைச்சி உள்ளிட்டவைகளை வாங்கி சென்றனர். ராணிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் முதல் வெறிச்சோடி கிடக்கும் கடைவீதிகள் நேற்று இரவு வரை பொதுமக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்பட்டது.