நெல் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெறுவது எப்படி வேளாண்துறை உதவி இயக்குனர் தகவல்

நெல் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெறுவது எப்படி என்பது குறித்து ஆனைமலை வட்டார வேளாண்துறை உதவி இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-05-23 17:25 GMT
பொள்ளாச்சி

நெல் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெறுவது எப்படி என்பது குறித்து ஆனைமலை வட்டார வேளாண்துறை உதவி இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்து உள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

நெல் சாகுபடி 

முதல் போக நெல் சாகுபடி மேற்கொள்ள தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தற்போது, அலுவலகத்தில் கோ -51 நெல் விதை இருப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. 

ஒரு கிலோ விதையின் விலை ரூ.18.50 ஆகும். விதை 1.7 டன்னுக்கு மேல் இருப்பு உள்ளது. இந்த நெல் விதை முளைப்புத் திறன் 90 சதவீதத்துக்கு மேல் உள்ளது. அதிக மகசூல் பெறுவதுடன் பூச்சி தாக்குதலையும் குறைகிறது. 

மேலும், 22.5 செ.மீ. இடைவெளியில் எந்திரம் அல்லது அணி நடவு முறையில் நடவு செய்ய வேண்டும். 

தழைச்சத்து 

சேறு அதிகமாக இருக்கும்போது ஒரே குழியில் 2 நாற்றுகள் நடவு செய்யலாம். இதனால் பயிர்களின் தண்டு அழுகல், புகையான் போன்ற நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த முடியும். 

தழைச்சத்து உரங்களை தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
2.47 ஏக்கருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட் 50 கிலோ மணலுடன் கலந்து உரமிட வேண்டும். 

நடவு முதல் அறுவடை வரை தழைச்சத்து 50 கிலோ, மணிச்சத்து 25 கிலோ, சாம்பல் சத்து 25 கிலோ போட வேண்டும். 

கூடுதல் மகசூல் 

நடவு முடிந்த ஒரு வாரத்தில் தலா 25 சதவீதம் தழைச்சத்து, சாம்பல் சத்து, 100 சதவீதம் மணிச்சத்து அடி உரமாக பயன்படுத்த வேண்டும். 40 நாட்களில் களை எடுத்த பின் 50 சதவீதம் தழைச்சத்து, 25 சதவீதம் சாம்பல் சத்து பயன்படுத்த வேண்டும். 

75-வது நாளில் 25 சதவீதம் தழைச்சத்து, 50 சதவீதம் சாம்பல் சத்து இடவேண்டும். இவ்வாறு, உரங்களை பயிர்களுக்கு பிரித்து அளிப்பதால் உரம் வீணாவதை தவிர்க்க முடியும். 

திருந்திய நெல் சாகுபடி முறை யால் 20 முதல் 25 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெற முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்