தூத்துக்குடியில் நடமாடும் காய்கறி அங்காடி கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் நடமாடும் காய்கறி அங்காடியை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடிகளை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
நடமாடும் காய்கறி அங்காடி
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் கூட்டமைப்புகள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடிகள் தொடக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, காய்கறி விற்பனையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
9,662 மகளிர் சுய உதவிக்குழுக்கள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்காக ஊரடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையொட்டி மாவட்டத்தில் கிராமம், பேரூராட்சி, நகர்ப்புற பகுதிகளில் மக்கள் வசிக்கும் இடங்களிலேயே காய்கறிகள், மீன், இறைச்சி உள்ளிட்டவற்றை நடமாடும் அங்காடிகள் வாயிலாக மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்புகளின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நடமாடும் காய்கறி வியாபாரிகளுக்கும் எந்தெந்த பகுதிக்கு செல்லலாம் என வரையறை செய்யப்பட்டு கிராமப்பகுதிகளில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும். இதன்மூலம் மக்கள் அதிகமாக கூட்டம் கூடாமல் கொரோனா பரவலை தடுக்க முடியும்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 9,662 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இதில் தகுதியுள்ள குழுக்களை இதுபோன்ற விற்பனைக்கு ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் மகளிர் திட்ட இயக்குனர் (பொறுப்பு) லட்சுமணன், உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் மல்லிகா, பாலசுந்தரம், சாமுதுரை, ரூபன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
யோகா பயிற்சி
தொடர்ந்து தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய்த்தொற்று பாதுகாப்பு மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு யோகாசன பயிற்சி, நுரையீரலை வளப்படுத்தும் வகையில் மூச்சுப்பயிற்சி மற்றும் பல்வேறு பயிற்சிகள் சித்த மருத்துவ யோகா பிரிவின் மூலம் அளிக்கப்படுகிறது.
இதனை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கொரோனா நிவாரண நிதி
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஸ்பிக் நிறுவனத்தின் மூலம் முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.1 கோடிக்கான காசோலையையும், கலெக்டரின் தன்விருப்ப நிதிக்கு ரூ.1 கோடிக்கான காசோலையையும் கனிமொழி எம்பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரிடம் ஸ்பிக் நிறுவன முழுநேர இயக்குனர் ராமகிருஷ்ணன், துறைத்தலைவர் (நிர்வாகம்) கோபாலகிருஷ்ணன், முதுநிலை மேலாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட அவர்கள் கலெக்டர் செந்தில்ராஜிடம் வழங்கினர். மேலும் ஸ்பிக் நிறுவனத்தின் மூலம் ரூ.28 லட்சம் மதிப்பில் 400 ஆக்சிஜன் ப்ளோ மீட்டர்களையும் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாநகராட்சி நல அலுவலர் வித்யா, தாசில்தார் ஜஸ்டின் செல்லத்துரை, சித்த மருத்துவ பிரிவு யோகா ஆசிரியர் சுமங்கலி, மருத்துவர் சுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.