டிரைவரை கொன்று ஏ.டி.எம்.மில் நிரம்ப சென்ற ரூ.75 லட்சம் கொள்ளை: தலைமறைவாக இருந்த 4 பேர் கைது 2 கார்கள், நகை, பணம் பறிமுதல்

பெங்களூருவில் டிரைவரை கொன்று ஏ.டி.எம். மையத்தில் நிரப்ப வைத்திருந்த ரூ.75 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து 2 கார்கள், நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-05-23 15:46 GMT
பெங்களூரு, 

பெங்களூரு கே.ஜி.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களும், காவலாளியும் கடந்த 2018-ம் ஆண்டு பணம் நிரப்பி கொண்டிருந்தனர். அப்போது பணம் இருந்த வாகனத்துடன் டிரைவரை மர்மநபர்கள் கடத்தி சென்று விட்டார்கள். அந்த வாகனத்தில் ரூ.75 லட்சம் வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அதே நேரத்தில் கே.ஜி.ஹள்ளியில் இருந்து கடத்தப்பட்ட பாதுகாப்பு நிறுவனத்தின் வாகன டிரைவரான அப்துல் சாகித், கடத்தல் நடந்த ஓரிரு நாட்களில் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா அருகே கொலை செய்யப்பட்டு இருந்தார். பின்னர் அந்த கொலை வழக்கும் கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, டிரைவரை கொன்று, ரூ.75 லட்சத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில், கோவிந்தபுரா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த 4 பேரை கைது செய்துள்ளனா். விசாரணையில், ்அவர்கள், கே.ஆர்.நகரை சேர்ந்த குமார் (வயது 23), மதுசூதன் (23), மத்திகானஹள்ளியை சேர்ந்த பிரசன்னா (31), மகேஷ் (24) என்று தெரிந்தது. இவர்களில் குமாரும், பிரசன்னாவும், அப்துல் சாகித் வேலை செய்த அதே பாதுகாப்பு நிறுவனத்தில் முதலில் வேலை செய்து வந்துள்ளனர்.

பின்னர் எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் வேலையில் இருந்து நின்று விட்டார்கள். கடந்த 2018-ம் ஆண்டு நாகவாரா மெயின் ரோட்டில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு அப்துல் சாகித் பணம் எடுத்து வருவது பற்றி, அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது. இதையடுத்து, பணம் இருக்கும் வாகனத்தை கடத்தி சென்று விடலாம், இதற்காக அதிக பணம் தருவதாக அப்துல் சாகித்திடம் குமாரும், பிரசன்னாவும் கூறியுள்ளனர். இதற்கு அவரும் சம்மதித்துள்ளார்.

அதன்படி, ஊழியர்களும், காவலாளியும் பணத்தை நிரப்ப செல்லும் சந்தர்ப்பத்தில் பணம் இருந்த வாகனத்துடன் அப்துல் சாகித்துடன், குமார் உள்பட கைதான 4 பேரும் வாகனத்தை கடத்தி சென்றுள்ளனர். ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா பகுதியில் வாகனம் செல்லும் போது, இந்த கொள்ளை சம்பவத்தில் தனக்கு உடன்பாடு இலலை என 4 பேரிடமும் அப்துல் சாகித் தெரிவித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அப்துல் சாகித்தை 4 பேரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் ரூ.75 லட்சத்துடன் 4 பேரும் தலைமறைவாகி இருந்தனர். அப்துல் சாகித்துடன் கைதான குமாா் செல்போனில் பேசி இருந்தார். அந்த ஆதாரம் மற்றும் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிக்ள மூலமாக 4 பேரையும் கோவிந்தபுரா போலீசார் கைது செய்திருந்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான 2 கார்கள், தங்க நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 4 பேர் மீதும் கோவிந்தபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்