பெங்களூருவில் டிரைவர் உள்பட 2 பேரை தாக்கி ரூ.48 லட்சம் பான் மசாலாவுடன் கடத்திய மினிலாரி மீட்பு மர்மநபர்களை போலீஸ் தேடுகிறது
பெங்களூருவில் டிரைவர் உள்பட 2 பேரை தாக்கி ரூ.48 லட்சம் பான் மசாலாவுடன் கடத்திய மினிலாரி மீட்கப்பட்டுள்ளது. தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
பெங்களூரு,
பெங்களூரு சுல்தான்பேட்டையில் பான்மசாலா தயாரித்து விற்கும் நிறுவனம் உள்ளது. அங்கு தயாரிக்கப்படும் பான் மசாலா பாக்கெட்டுகளை கடந்த 20-ந் தேதி மினிலாரியில் ஏற்றிக் கொண்டு டிரைவர் சங்கர் உள்பட 2 பேர் விஜயாப்புரா மாவட்டத்திற்கு புறப்பட்டார்கள். அந்த மினிலாரியில் ரூ.48 லட்சத்திற்கு பான் மசாலா பாக்கெட்டுகள் இருந்தது. சந்திரா லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாயண்டஹள்ளி ஜங்ஷன் பகுதியில் மினிலாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் லாரியை வழிமறித்தனர். உடனே டிரைவர் சங்கரும் லாரியை நிறுத்தினார். இந்த நிலையில், ஆட்டோவில் இருந்து இறங்கிய மர்மநபர்கள், சங்கரையும், அவருடன் இருந்த நபரையும் தாக்கினார்கள். பின்னர் அவர்களை ஆட்டோவில் கடத்தி சென்றார்கள். சும்மனஹள்ளி அருகே சங்கர் உள்பட 2 பேரையும் ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டு மர்மநபர்கள் சென்றிருந்தனர்.
பின்னர் நாயண்டஹள்ளி ஜங்ஷனுக்கு சங்கர் வந்து பார்த்த போது, ரூ.48 லட்சம் மதிப்பிலான பான்மசாலா பாக்கெட்டுகளுடன் அந்த லாரியை மர்மநபர்கள் கடத்தி சென்றிருந்தனர். இதுகுறித்து சந்திரா லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தார்கள். அப்போது காட்டன்பேட்டையில் உள்ள ஒரு குடோன் அருகே மினிலாரி நிறுத்தப்பட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த லாரியில் பான் மசாலா பாக்கெட்டுகள் அப்படியே இருப்பது தெரியவந்தது. ஊரடங்கு காரணமாக, போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்ற பயத்தில் லாரியை விட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை சந்திரா லே-அவுட் போலீசார் தேடிவருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து சங்கரிடம் போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றுள்ளனர்.