மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நைஜீரியாவை சேர்ந்த 3 பேருக்கு வலைவீச்சு

பெங்களூருவில் மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீஸ்காரர்களை தாக்கிய நைஜீரியாவை சேர்ந்த 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2021-05-23 15:31 GMT
பெங்களூரு, 

பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் மருத்துவ உபகரணங்களை பொதுமக்களுக்கு இணையதளம் மூலமாக விற்பனை செய்வதாக கூறி ஒரு கும்பல் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டு வருகிறது. அதுபோல், நைஜீரியாவை சேர்ந்த சிலர் ஆன்லைன் மூலமாக மருத்துவ உபகரணங்கள் தருவதாக கூறி பணம் வாங்கி தன்னிடம் மோசடி செய்து விட்டதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருந்தனர்.

அதன்பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், அம்ருதஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மங்கமனபாளையா அருகே காவேரி லே-அவுட்டில், அந்த மோசடி கும்பலை சேர்ந்த நைஜீரிய வாலிபர்கள் வசிப்பது பற்றி தெரியவந்தது. உடனே மத்திய குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீஸ்காரர்கள், காவேரி லே-அவுட்டில் உள்ள வீட்டுக்கு சென்றார்கள். அங்கு 3 வாலிபர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.

இந்த நிலையில், திடீரென்று அந்த வாலிபர்கள், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் 4 பேரையும் கீழே தள்ளிவிட்டு 3 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டார்கள். அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது பாஸ்போர்ட்டுகள், போலி சிம்கார்டுகள், செல்போன்கள் கிடைத்தது. அவற்றை கைப்பற்றி போலீசார் எடுத்து சென்றனர்.

மேலும் நைஜீரியாவை சேர்ந்த ஜான், இபே, ஓகோலேயஸ் ஆகிய 3 பேர் அங்கு வசித்து வந்ததும், பணம் சம்பாதிக்கும் ஆசையில் இணையதளத்தில் கொரோனா மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்