ஆங்கில மருத்துவம் குறித்த பாபா ராம்தேவின் கருத்து தவறானது மருத்துவ நிபுணர் கண்டனம்

ஆங்கில மருத்துவம் குறித்த பாபா ராம்தேவின் கருத்து தவறானது என மருத்துவ நிபுணர் சசாங் ஜோஷி தெரிவித்து உள்ளார்.

Update: 2021-05-23 14:01 GMT
மும்பை, 

யோகா குரு பாபா ராம்தேவ் அலோபதி (ஆங்கில) மருத்துவம் குறித்து கடும் விமர்சனங்களை தெரிவித்து இருந்தார். அவர் ஆங்கில மருத்துவத்தை 'முட்டாள் மருத்துவம்' என கூறியிருந்தார்.

மேலும் இதுகுறித்து அவர் பேசிய வீடியோவில், ஆங்கில மருந்துகளை சாப்பிட்ட லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து உள்ளனர், இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்த ரெம்டெசிவிர், பவிபுளு, மற்ற மருந்துகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தவறிவிட்டது என கூறியிருந்தார்.

பாபா ராம்தேவின் பேச்சுக்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

இதுகுறித்து மராட்டிய கொரோனா பணிக்குழு உறுப்பினரும், மருத்துவ நிபுணரான டாக்டர் சசாங் ஜோஷி பாபா ராம்தேவ் குறித்து கூறுகையில், " இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துகளை கூறுவது தவறானது ஆகும். ரெம்டெசிவிர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வர உதவுகிறது. ஆனால் அது உயிர்காக்கும் மருந்து அல்ல. மேலும் அந்த மருந்து யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆங்கில மருத்துவம் குறித்து இதுபோன்ற கருத்துகள் கூறுவது தவறாகும். ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகளை நான் மதிக்கிறேன். " என்றார்.

மேலும் செய்திகள்