ஈரோடு மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலி- புதிய உச்சமாக 1,758 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். மேலும் நேற்று மாவட்டத்தில் புதிய உச்சமாக 1,758 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-05-23 00:22 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். மேலும் நேற்று மாவட்டத்தில் புதிய உச்சமாக 1,758 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

புதிதாக 1,758 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக 1,500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிய உச்சமாக மேலும் 1,758 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 7 ஆக உயர்ந்தது.

10 பேர் பலி

இதற்கிடையில் ஈரோட்டை சேர்ந்த 69 வயது ஆணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 14-ந்தேதி அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மேலும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்றுவந்த 49 வயது பெண் கடந்த 18-ந்தேதியும், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது பெண், கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண், 75 வயது ஆண், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 74 வயது ஆண் ஆகியோர் கடந்த 20-ந்தேதி இறந்தனர்.
இதேபோல் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்றுவந்த 73 வயது ஆண், 54 வயது ஆண், 49 வயது ஆண், நாமக்கல் மாவட்டம் குமாராபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது ஆண் ஆகியோர் நேற்று முன்தினம் இறந்தனர்.  இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 236 ஆக உயர்ந்தது.

10,484 பேர் சிகிச்சை

மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 981 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 31 ஆயிரத்து 287 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மேலும் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை கடந்தது. தற்போது தொற்று உள்ள 10 ஆயிரத்து 484 பேர் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்