சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கம் பயணிகள் இல்லாததால் பஸ் நிலையம் வெறிச்சோடியது

சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பயணிகளின் கூட்டம் இல்லாததால் சேலம் புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2021-05-22 22:07 GMT
சேலம்:
சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பயணிகளின் கூட்டம் இல்லாததால் சேலம் புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
பஸ்கள் இயக்கம்
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. அதே சமயம் பொதுமக்கள் நலன் கருதி நேற்று மாலையும், இன்று (ஞாயிறுக்கிழமை) ஒரு நாள் அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 
அதன்படி, சேலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நேற்று மாலையில் இருந்து குறிப்பிட்ட அளவிலான அரசு பஸ்கள் முக்கிய ஊர்களுக்கு மட்டும் இயக்கப்பட்டன.
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாமக்கல், திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னை, கடலூர், வேலூர், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு நேற்று இரவு பஸ்கள் சேவை தொடங்கியது. ஆனால் பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது.
வெறிச்சோடியது
அதாவது, ஒரு இருக்கைக்கு ஒருவர் மட்டுமே அமர்ந்து இருந்தனர். அதுவும் முககவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என கண்டக்டர்கள் அறிவுறுத்தினர். சேலத்தில் தங்கியிருந்த வெளியூர் நபர்கள் மட்டுமே பஸ்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் சேலம் புதிய பஸ்நிலையம் நேற்றிரவு குறைந்த அளவிலான பஸ்களுடன் வெறிச்சோடியது. 
அதேபோல் சேலம் மாநகரில் நேற்று இரவு டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்று ஒருநாள் மட்டும் வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வெளியூர் செல்ல வேண்டிய பொதுமக்கள் தாராளமாக சென்று வரலாம். அதேசமயம் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் முக கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆத்தூர்
ஆத்தூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், கள்ளக்குறிச்சி, ராசிபுரம், பெரம்பலூர், திருச்சி உள்பட வெளியூர்களுக்கு நேற்று மாலை முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. எனினும் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்