முழு ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த 11 தொகுதிகளுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்-அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

முழு ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த 11 தொகுதிகளுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

Update: 2021-05-22 21:46 GMT
சேலம்:
முழு ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த 11 தொகுதிகளுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
ஆய்வு கூட்டம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தமிழக மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார்.
மாவட்ட கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும் போது கூறியதாவது:-
11 தொகுதிகளுக்கு நியமனம்
சேலம் மாவட்டம் முழுவதும் 177 பகுதிகளில் 354 நபர்கள் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகும் நபர்களை கொரோனா சிறப்பு மையங்களில் சேர்த்து கண்காணித்தல், முழு ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதை கண்காணிப்பதற்காகவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியாக பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், ஆத்தூர் தொகுதிக்கு ஆத்தூர் உதவி கலெக்டர் துரை, ஏற்காடு தொகுதிக்கு தனித்துணை ஆட்சியர் (முத்திரைக்கட்டணம்) கோவிந்தன், ஓமலூர் தொகுதிக்கு மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) கீதா பிரியா, மேட்டூர் தொகுதிக்கு மேட்டூர் உதவி கலெக்டர் சரவணன், எடப்பாடி தொகுதிக்கு உதவி ஆணையர் (கலால்) தனலிங்கம், சங்ககிரி தொகுதிக்கு சங்ககிரி ஆர்.டி.ஓ. வேடியப்பன், சேலம் மேற்கு தொகுதிக்கு தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சத்திய பால கங்காதரன், சேலம் வடக்கு தொகுதிக்கு சேலம் வருவாய் கோட்டாட்சியர் சி.மாறன், சேலம் தெற்கு தொகுதிக்கு சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், வீரபாண்டி தொகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பண்டரிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கண்காணிக்க வேண்டும்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலைத் தடுத்திட ஊரடங்கினை கண்காணித்திடவும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு தனியாக உள்ளார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும். வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை, தேவையான பொருட்கள் மற்றும் உதவிகள் கிடைக்கிறதா? என்பதை கண்காணித்து உறுதி செய்திட வேண்டும். 
மேலும், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களின் உடல் நலனை கண்காணித்திட வேண்டும். கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தார் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த நபர்களை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்.
அனைத்து பொருட்கள்
மேலும், சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது என்பதை தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு நேரில் சென்று விற்பனை செய்யப்பட்டு வருவதை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். 
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.
கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இரும்பாலையில் ஆலோசனை
முன்னதாக நேற்று காலை இரும்பாலை வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும் போது, சேலம் இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகளை விரைந்து ஏற்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார். இதன்மூலம் சேலம் உருக்காலை வளாகத்தில் ஒரே இடத்தில் 1000 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்