பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க 3 இடங்களில் காய்கறி மார்க்கெட்

ஜெயங்கொண்டம் நகரில் ஒரே பகுதியில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க 3 இடங்களில் காய்கறி மார்க்கெட் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-22 19:53 GMT
ஜெயங்கொண்டம்:

சமூக இடைவெளியின்றி குவிந்தனர்
அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் கொேரானா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் ஜெயங்கொண்டம் பகுதியிலும் பலர் பாதிக்கப்படுவதோடு, உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக நேற்று முன்தினம் ஒருவரும், நேற்று 2 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரத்தைப்போல் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படலாம் என்று நினைத்த பெரும்பாலான பொதுமக்கள், நேற்று தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்க ஜெயங்கொண்டம் நகரில் கடைவீதி, காய்கறி மார்க்கெட், விருத்தாச்சலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளி இன்றி குவிந்தனர். இதனால் ஜெயங்கொண்டம் பகுதியில் மேலும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
3 இடங்களில் காய்கறி மார்க்கெட்
கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் ஜெயங்கொண்டம் நகரில் காய்கறி விற்பனைக்காக 3 இடங்களில் கூடுதலாக காய்கறி மார்க்கெட் அமைத்து விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது. தற்போதும் அதேபோல் காய்கறி மார்க்கெட் 3 இடங்களில் விற்பனை செய்ய அனுமதித்தால் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவது தவிர்க்கப்பட்டு, சமூக இடைவெளி கடைபிடிக்கும் வாய்ப்பும் ஏற்படும். நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில், மீண்டும் தளர்வுகள் அளிக்கும்போது மூன்று இடங்களில் காய்கறி மார்க்கெட் அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்