கடைகள் திறப்பு; பஸ், ஆட்டோக்கள் ஓடின

அரசின் உத்தரவை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் கடைகள் திறக்கப்பட்டன. பஸ், ஆட்டோக்கள் ஓடின.

Update: 2021-05-22 19:53 GMT
அரியலூர்:

சிறிய கடைகள் திறப்பு
தமிழக அரசு நாளை(திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நேற்று அறிவித்ததோடு, நேற்றும், இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்களை திறக்கலாம், அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடலாம் என்று நேற்று அறிவித்தது. இதையடுத்து அரியலூரில் சிறிய கடைகள் திறக்கப்பட்டன. நகரில் ஆட்டோக்கள் ஓடத் தொடங்கின.
பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு ஒரு சில அரசு பஸ்கள் மட்டும் ஓடத்தொடங்கின. ஆனால் பயணிகள் கூட்டம் இல்லை. பெரிய கடைகளில் வெளியூரில் இருந்து பணியாளர்கள் வேலைக்கு வரும் நிலையில், ஆட்கள் பற்றாக்குறையால் நேற்று கடைகள் திறக்கப்படவில்லை. ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக பஸ்கள், கடைவீதிகளிலும் மற்றும் பெரிய கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால், போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் ஆங்காங்கே ஒலிபெருக்கிகள் அமைத்து மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் பகுதியில் நேற்று மாைல கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பஸ்கள் ஒவ்வொன்றாக பஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் பணிமனையில் இருந்து சென்னைக்கு 10 பஸ்களும், திருச்சி, அரியலூர், கும்பகோணம் பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் தலா 5 என மொத்தம் 30 பஸ்கள் இயக்கப்பட்டன. அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, அரியலூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் பயணிகள் வருகை இல்லாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை பஸ்களில் 5 பேரும், டவுன் பஸ்களில் தலா 5 முதல் 6 பேரும், அரியலூர், திருச்சி பஸ்களில் 3 முதல் 5 பேரும் என அமர்ந்திருந்தனர். இதனால் பெரும்பாலான பஸ்களின் இருக்கைகள் பயணிகளின்றி காலியாகவே இருந்தன. பயணிகள் வருகைக்காக டிரைவர்களும், கண்டக்டர்களும் காத்திருந்தனர்.
ஆண்டிமடம்
ஊரடங்கு காரணமாக ஆண்டிமடம் பகுதியில் நேற்று காலை 6 முதல் 10 வரை திறக்கப்பட்டிருந்த கடைகளில் பொருட்களை வாங்கிக்கொண்டு பொதுமக்கள் வீட்டிற்கு சென்றனர். கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் மதியம் அரசின் உத்தரவை தொடர்ந்து, ஆண்டிமடத்தில் உள்ள மளிகைக்கடைகள், ஜவுளிக் கடைகள், காய்கறி கடைகள் மட்டும் திறந்திருந்தன. பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதேபோல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டன.

மேலும் செய்திகள்