முழு ஊரடங்கை மீறிய 2,436 வாகனங்கள் பறிமுதல்
முழு ஊரடங்கை மீறிய 2,436 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
ஊட்டி,
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நீலகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தேவையில்லாமல் வெளியே வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் கூறியதாவது:- கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நீலகிரியில் 20 இருசக்கர வாகனங்கள், 13 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் கூட்டமாக நின்றவர்கள் என 95 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
முககவசம் அணியாமல் இருந்த 1,965 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நீலகிரி மாவட்டம் முழுவதும் காவல்துறை மூலம் கொரோனா விதிமீறல்களில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு மற்றும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த ஆண்டு முதல் இதுவரை சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் 343 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 500 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
முககவசம் அணியாத 12 ஆயிரத்து 464 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.24 லட்சத்து 92 ஆயிரத்து 800 அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கை மீறியதாக 8 ஆயிரத்து 643 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,697 இருசக்கர வாகனங்கள், 214 மூன்று சக்கர வாகனங்கள் உள்பட 2,436 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.