தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உருவப்படங்களுக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானர்களின் உருவப்படங்களுக்கு அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு 3-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் அரங்கில், துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அலங்கரிக்கப்பட்ட உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் தலைமையில் கட்சியினர் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மாநகர செயலாளர் ராஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஜாய்சன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பு செயலாளர் ஹென்றிதாமஸ் தலைமை தாங்கினார். இறந்தவர்களின் உருவப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி 30-வது வட்ட அ.ம.மு.க. செயலாளர் காசிலிங்கம், டூவிபுரத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.