கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு கடந்த 20 நாட்களில் 8,060 பேர் பலியானதால் பீதி

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 8,060 பேர் உயிரிழந்துள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-22 16:58 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது. காலை 6 மணியில் இருந்து காலை 10 மணி வரை 4 மணி நேர மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மக்களுக்கு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இருப்பினும் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் அனுமதி அளிக்காமல் முழு ஊரடங்கை அமல்படுத்தி மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மாநிலத்தில் கொரேனாா பரவலுக்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் படிப்பாக குறைந்து வருகிறது. வருகிற 24-ந் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதே கருத்தை ஆளும் பா.ஜனதா கட்சியை சேர்ந்த மந்திரிகளும், எதிர்க்கட்சி தலைவர்களான சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்ட தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் கர்நாடகத்தில் ஊரடங்கு மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு படிப்பாக குறைய தொடங்கினாலும், கொரோனாவால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. அதுவும் கொரோனா முதல் அலையை காட்டிலும், 2-வது அலையில் கொரோனாவுக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே மராட்டியத்திற்கு அடுத்தபடியாக கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையில் கர்நாடகம் 2-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி வரை கொரோனா முதல் அலையில், அதாவது ஒரு ஆண்டில் கர்நாடகத்தில் 12,432 பேர் கொரோனாவுக்கு தங்களது உயிரை பறி கொடுத்திருந்தனர். ஆனால் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் (20-ந் தேதி) வரை 2 மாதத்தில் மட்டும் 11,442 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது மக்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக கடந்த 1-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை 20 நாட்களில் மட்டும் 8 ஆயிரத்து 60 பேர் கொரோனாவுக்கு தங்களது உயிரை பறி கொடுத்திருக்கிறார்கள். நேற்று முன்தினம் ஒரே நாளில் 548 பேர் பலியாகி இருந்தார்கள். கொரோனா பாதிப்பு தினமும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேருக்கு ஏற்படும் போது கூட சாவு எண்ணிக்கை குறைவாக தான் இருந்தது. குறிப்பாக ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை கிடைக்காமல் அவதி என பல பிரச்சினைகள் இருந்தாலும் பலி எண்ணிக்கை குறைவாக இருந்தது.

தற்போது அரசு சுதாரித்து கொண்டு ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. ஆனாலும் கடந்த 20 நாட்களில் கொரோனாவுக்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்து வருவது ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக இதற்கு முன்பு கொரோனாவுக்கு பலியாகும் நபர்கள் 60 வயதுக்கு மேற்பட்டோர்களாகவே இருந்தார்கள். ஆனால் தற்போது கொரோனா 2-வது அலையில் 20 வயதில் இருந்து 49 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினர் அதிகமாக உயிர் இழந்து வரும் அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. குறிப்பாக 20 வயதில் இருந்து 29 வயதுக்கு உட்பட்டவர்கள் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி வரை 217 பேர் மட்டுமே உயிரிழந்திருந்தனர். ஆனால் அடுத்த 2 மாதத்தில் 20 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் 442 பேர் கொரோனாவுக்கு உயிர் இழந்திருப்பது தெரியவந்துள்ளது.

அதுபோல், 30 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,223 பேரும், 40 வயது முதல் 49 வயது வரையிலானவர்கள் 2,767 பேரும் கொரோனா 2-வது அலையில் கொரோனாவுக்கு தங்களது உயிரை பறி கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே கொரோனா 2-வது அலையில் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும், காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, பாதிப்பு இருப்பது தெரியவந்தால், உரிய சிகிச்சை பெறும்படி ஜெயதேவா ஆஸ்பத்திரி டாக்டர் மஞ்சுநாத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்