திண்டுக்கல்லில் சகதி காடாக மாறிய தற்காலிக காய்கறி மார்க்கெட்
திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் மழையால் சகதிகாடாக மாறியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் குமரன் பூங்கா அருகே காந்தி மார்க்கெட் அமைந்துள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் காந்தி மார்க்கெட் பழனி ரோட்டில் லாரிபேட்டை அருகே கடந்த 17-ந்தேதி மாற்றப்பட்டது. பின்னர் அங்கும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் லாரி பேட்டை மார்க்கெட்டுடன் சேர்ந்து திண்டுக்கல் நாகல்நகர் சந்தை பகுதி, திண்டுக்கல் பஸ் நிலையம், ஐ.டி.ஐ. வளாகம் ஆகிய 4 இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகள் அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் முதல் பயன்பாட்டுக்கு வந்தன.
இந்த நிலையில் திண்டுக்கல் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. இதில் பழனி ரோட்டில் லாரி பேட்டை அருகே உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் மழைநீர் தேங்கியதால் அந்த இடம் முழுவதும் சகதி காடாக மாறியது. இதனை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சகதியில் நடந்து சென்று பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச்செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மார்க்கெட் பகுதி சகதிகாடாக உள்ளதால் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே தற்காலிக மார்க்கெட்டை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.