திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த ஆக்சிஜன் டேங்கர் லாரி
திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் டேங்கர் லாரி வந்தது. அப்போது போலீஸ் பாதுகாப்புடன் கொள்கலனில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டது.
திண்டுக்கல்:
கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையில் சிக்கி உயிர் பிழைத்தவர்களும், 2-வது அலையில் மீண்டும் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் கிடைக்காததால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தினமும் ஆயிரக்கணக்கில் கொரோனா நோயாளிகள் இறந்தனர்.
இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் டேங்கர்கள் கொண்டுவரப்பட்டு நாடு முழுவதும் ரெயில், லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரெயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் சரக்கு ரெயில் மூலம் 5 ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த 5 ஆக்சிஜன் டேங்கர் லாரிகளில் ஒரு ஆக்சிஜன் டேங்கர் லாரி, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு நேற்று வந்தது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அந்த டேங்கர் லாரி, அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 6 டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் இருக்கும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து டேங்கரில் இருந்த ஆக்சிஜன் கொள்கலனில் நிரப்பப்பட்டது.