கொரோனா பாதிப்பு நோயாளிகளின் அவசர தேவைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு, தன்னார்வ சேவை அமைப்புகள் சார்பில் ஆக்சிஜன் பஸ் வழங்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு நோயாளிகளின் அவசர தேவைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு, தன்னார்வ சேவை அமைப்புகள் சார்பில் ஆக்சிஜன் பஸ் வழங்கப்பட்டது.

Update: 2021-05-22 15:24 GMT
உடுமலை
கொரோனா பாதிப்பு நோயாளிகளின் அவசர தேவைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு, தன்னார்வ சேவை அமைப்புகள் சார்பில் ஆக்சிஜன் பஸ் வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வேகமெடுத்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதனால் அவ்வாறு வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது.
ஆக்சிஜன் தேவைக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆக்சிஜன் தேவை உள்ளிட்டு கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளுடன், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ சேவை அமைப்புகள் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றன.
ஆக்சிஜன் பஸ்
அதன்படி யங் இந்தியன்ஸ் என்ற திருப்பூர் மக்கள் நல அமைப்பு, உடுமலை ஆரண்யா அறக்கட்டளை, உடுமலை ரோட்டரி, தேஜஸ் ரோட்டரி, கேலக்ஸி ரோட்டரி, ஸ்டார் ரோட்டரி, சென்ட்ரல் ரோட்டரி, ஆர்.ஜி.எம்.பள்ளி ஆகியவற்றின் சார்பில் உடுமலையில் ஆக்சிஜன் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான உபயோகத்திற்காக உடுமலை ஆர்.ஜி.எம்.பள்ளியின் பஸ்சில் 6  ஆக்சிஜன் செறிவூட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 6 மின் விசிறிகளும் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் ஆகும்.
காற்றில் ஆக்சிஜன் 20  சதவீதமும், நைட்ரஜன் 70 சதவீதமும் உள்ளன. இந்த ஆக்சிஜன் செறிவூட்டி, காற்றில் உள்ள ஆக்ஸிஜனை பிரித்து எடுத்து அதை 93 சதவீத ஆக்ஸிஜனாக மாற்றி கொடுக்கும் என்று இந்த தன்னார்வ சேவை அமைப்புகளை சேர்ந்த டாக்டர்கள் தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனை
இந்த ஆக்சிஜன் பஸ் உடுமலை அரசு மருத்துவ மனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வராஜிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆக்ஸிஜன் பஸ் உடுமலை அரசு மருத்துவ மனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். மருத்துவ மனைக்கு, ஆம்புலன்சில் அழைத்துவரப்படும் கொரோனா நோயாளிகளுக்கு அவசரமாகஆக்சிஜன் தேவைப்படும் பட்சத்தில், மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்கும் நேரம் வரை ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்தினறலுடன்ஆபத்தான நிலையில் காத்திருக்கும் நிலையை தவிர்க்க, மருத்துவ மனையில் படுக்கை வசதி கிடைக்கும் வரைகாத்திருப்பதற்கு இந்த ஆக்சிஜன் பஸ் பெரும் உதவியாக இருக்கும்.
இந்த ஆக்சிஜன் பஸ்சை உடுமலை அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு யங் இந்தியன்ஸ் என்ற திருப்பூர் மக்கள் நல அமைப்பைச்சேர்ந்த மோகன் தலைமை தாங்கினார். உடுமலை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் டாக்டர் கே.பாலசுந்தரம், தேஜஸ் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் டாக்டர் எஸ்.சுந்தரராஜன், ஆனந்த் மற்றும் ஆடிட்டர் சிவப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆக்சிஜன் சிலிண்டர்கள்
அத்துடன் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்கு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு முக்கியமாக தேவைப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் 8 ஆரண்யா அறக்கட்டளை செயலாளர் நந்தினி ரவீந்திரன் சார்பில் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்