மத்திய அரசு, மும்பை மாநகராட்சி மீது ஐகோர்ட்டு பாய்ச்சல் ‘‘எங்களை மனச்சோர்வுக்கு தள்ளிவிட்டீர்கள்’’
வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டம் குறித்து மத்திய அரசு மற்றும் மும்பை மாநகராட்சியை ஐகோர்ட்டு கடுமையாக சாடி உள்ளது. எங்களை மனசோர்வுக்கு தள்ளிவிட்டீர்கள் என்று கூறியுள்ளது.
மும்பை,
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், படுக்கையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்ள வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மத்திய அரசிடம் இதுகுறித்து பதில் அளிக்குமாறு கூறியிருந்தது.
ஆனால் மத்திய அரசு இந்த திட்டத்தால் மருந்துகள் வீணாகும், எதிர்விளைவு ஏற்படும் என கூறி தட்டிக்கழித்தது.
இதையடுத்து மும்பை மாநகராட்சி வீடு, வீடாக சென்று தடுப்பூசி வழங்க தயாராக இருந்தால், ஐகோர்ட்டு அவர்களுக்கு அனுமதி வழங்கும் என தெரிவித்து இருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபங்கர் தத்த மற்றும் நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி தலைமையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மும்பை மாநகராட்சி அளித்த பதிலில், ‘‘வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடுவதற்கான கொள்கையை மத்திய அரசு இன்னும் கொண்டுவரவில்லை. இதற்காக வழிகாட்டுதல்கள் மத்திய அரசிடம் இருந்து வழங்கப்படும் பட்சத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்’’ என்று கூறியது. இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:-
மத்திய அரசு எங்களை மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளாக்கி உள்ளது. மத்திய அதிகாரிகள் எங்களை ஏமாற்றமடைய செய்துவிட்டனர். அவர்கள் மிகவும் உணச்சியற்றவர்கள். முதியவர்கள் தடுப்பூசி மையத்தை நோக்கி விரைந்து செல்வதற்கு பதிலாக, அரசு அவர்களை சென்று அணுக வேண்டும். தடுப்பூசி காரணமாக ஒருவர் இறந்துவிட்டதாக கூறும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா? நிபுணர் குழுவுக்கு ஒரு வழி இல்லாவிட்டால் மற்றொரு வழியில் சிந்திக்க வேண்டும்.
மத்திய அரசு அனுமதி கொடுத்தால் தான் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடுவோம் என்று மும்பை மாநகராட்சியின் நிலைப்பாடு எங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மும்பை மாநகராட்சி அழுத்தத்திற்கு அடிபணிந்துள்ளது என்பதை அறிந்து திகைப்பு ஏற்படுகிறது. மும்பை மாநகராட்சி சமூக ஊடங்கங்களில் மக்களின் நலனுக்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட தயாராக இல்லை. நீங்கள் இதுபோன்ற பாகுபாடுகளை காட்ட கூடாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.