கொரோனா தடுப்பு நடவடிக்கை அகமதுநகர் மாவட்ட கலெக்டருக்கு பிரதமர் பாராட்டு
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அகமது நகர் மாவட்ட கலெக்டருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
மும்பை,
மராட்டியம் உள்பட நாடு முழுவதையும் கொரோனா நோய் தொற்று ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக எடுத்து வருகிறது.
இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து 60 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் 11 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.
இதில் மராட்டியத்தை சேர்ந்த 17 கலெக்டர்களும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் அகமதுநகர் கலெக்டர் ராஜேந்திர போசாலே மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த செயல்படுத்தப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து பிரதமரிடம் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அகமது நகர் மாவட்டத்தில் கொரோனா முதல் அலையின்போது இறப்பு விகிதம் 1.5 சதவீதமாக இருந்தது. 2-வது அலையின் போது இந்த மாவட்ட நிர்வாகம் தொடர்ச்சியாக எடுத்த நடவடிக்கை காரணமாக இறப்பு விகிதம் 0.9 சதவீதமாக குறைந்து உள்ளது.
மாவட்டத்தில் உள்ள 1,316 கிராம பஞ்சாயத்துகளில் ஒவ்வொரு வீட்டையும் ஆய்வு செய்ய சுகாதார அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் 4 குழுக்கள் உருவாக்கப்பட்டன.
நோயாளிகளிடம் தனியார் ஆஸ்பத்திரிகள் வசூலிக்கும் கூடுதல் கட்டணங்களை திருப்பி கொடுப்பதை மேற்பார்வையிட அதிகாரி நியமிக்கப்பட்டார்.
கிராம அதிகாரிகளின் மன உறுதியை அதிகப்படுத்த அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். மாவட்டத்தில் அக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் துணை கலெக்டர் அளவிலான அதிகாரமுள்ள அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டனர்.
ஆக்சிஜன் சீராக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஆஸ்பத்திரிகளில் மேற்பார்வை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். முதல் அலையின்போது புதிதாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் 2-வது அலையின்போது வீடுகளில் தனிமைப்படுத்துவது கூட நிறுத்தப்பட்டது. அனைத்து கொரோனா வைரஸ் நோயாளிகளும் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
ஊரடங்கு உத்தரவுகளை மீறுபவர்கள் மற்றும் பொதுவெளியில் அசுத்தம் செய்பவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அகமது நகர் மாவட்ட கலெக்டர் எடுத்த முயற்சிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக பிரதமர் நேரந்திர மோடி தெரிவித்தார். மேலும் அகமதுநகர் கலெக்டர் ராஜேந்திர போசாலேவை வெகுவாக பாராட்டினார்.
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளை பாராட்டினார்.