சேலத்தில் துணிகர சம்பவம்: மளிகை கடை உரிமையாளரை கட்டிப்போட்டு ரூ.50 லட்சம் கொள்ளை 3 பேரை பிடிக்க போலீசார் ராஜஸ்தான் விரைந்தனர்
சேலத்தில் மளிகை கடை உரிமையாளரை கட்டிப்போட்டு ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற கடை ஊழியர் உள்பட 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் ராஜஸ்தான் விரைந்தனர்.
சேலம்:
சேலத்தில் மளிகை கடை உரிமையாளரை கட்டிப்போட்டு ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற கடை ஊழியர் உள்பட 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் ராஜஸ்தான் விரைந்தனர்.
மளிகை கடை
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 30). இவர் சேலம் செவ்வாய்பேட்டை தெய்வநாயகபிள்ளை தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். மொத்த வியாபாரம் செய்து வருவதால் இவரிடம் பணப்புழக்கம் அதிகளவில் இருந்து வந்தது. மோகன்குமார் கடை வைத்திருந்த கட்டிடத்தில் 2-வது தளத்தில் அவரது வீடு இருந்தது. மேலும் 3-வது தளத்தில் கடையில் வேலை செய்யும் 4 ஊழியர்கள் தங்கியிருந்தனர்.
இவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கொரோனா ஊரடங்கு காரணமாக மோகன்குமார் முன்கூட்டியே மனைவி மற்றும் குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டார். மேலும் கடையில் வேலை பார்த்து வந்த 4 பேரில் ஓம்பிரகாஷ் என்பவரை தவிர மற்றவர்களும் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். இதனால் மோகன்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
ரூ.50 லட்சம் கொள்ளை
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி இரவு 7 மணி அளவில் ஓம்பிரகாஷ் தனது கூட்டாளிகள் 2 பேரை அழைத்து கொண்டு மோகன்குமார் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அவர்கள் திடீரென மோகன்குமாரை சரமாரியாக தாக்கியதுடன் அவரை அங்கேயே கட்டிப்போட்டனர். இதையடுத்து ஓம்பிரகாஷ் உள்பட 3 பேரும் பீரோவில் இருந்த ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்து ஒரு பையில் போட்டு கொண்டனர். பின்னர் அவர்கள் வீட்டின் வெளிப்புற கதவையும் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
சிறிது நேரத்தில் மோகன்குமாரின், அலறல் சத்தம் கேட்டு அருகில் வசித்து வருபவர்கள் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் வெளிப்புறமாக பூட்டியிருந்த பூட்டை உடைத்துக் கொண்டு போலீசார் உள்ளே சென்றனர். பின்னர் அங்கு கட்டிப்போடப்பட்டிருந்த மோகன்குமாரை மீட்டு விசாரணை நடத்தினர்.
ராஜஸ்தான் விரைந்தனர்
போலீசாரிடம் அவர், கடை ஊழியர் ஓம்பிரகாஷ் உள்பட 3 பேர் சேர்ந்து ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஓம்பிரகாஷ் உள்பட 3 பேரும் பணத்தை கொள்ளையடித்து சென்றது பதிவாகி இருந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க ராஜஸ்தான் விரைந்துள்ளனர். மளிகை கடை உரிமையாளரை கட்டிப்போட்டு ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.