கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடலூரில் காய்கறி மார்க்கெட்டுகள் இடமாற்றம்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடலூரில் காய்கறி மார்க்கெட்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
கடலூர்,
கொரோனா வைரஸ்
கடந்த ஆண்டு உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ், இந்த ஆண்டு இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தினசரி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை. அந்தவகையில் கடலூர் மாவட்டத்திலும் தினசரி 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தொற்று பரவலை தடுக்க அரசு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.
பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
மேலும் காய்கறி, பலசரக்கு, மளிகை கடைகள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி அனைத்து அத்தியாவசிய கடைகளும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
இருப்பினும் பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும், கடைவீதிகளில் தினந்தோறும் அலைமோதும் கூட்டத்தாலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் கொரோனா முதல் அலையின் போது பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தடுக்கும் வகையில் கடலூர் பஸ் நிலையம், மஞ்சகுப்பம் மைதானம், முதுநகரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகிய இடங்களுக்கு சந்தைகள் மாற்றப்பட்டு சமூக இடைவெளியுடன் கடைகள் அமைக்கப்பட்டன.
பஸ் நிலையத்துக்கு இடமாற்றம்
தற்போது கொரோனா 2-வது அலை பரவி வரும் நிலையில் இடநெருக்கடியான இடங்களிலேயே காய்கறி மார்க்கெட்டுகள் இயங்கி வந்தது. அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்துக்கொண்டு பொருட்கள் வாங்கிச் சென்றனர். இதனால் காய்கறி மார்க்கெட்டுகளை இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி கடலூர் பான்பரி மார்க்கெட் பஸ் நிலையத்திற்கும், மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கும், கடலூர் முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் முதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகிலும் இடமாற்றம் செய்யப்பட்டது.
வழக்கம்போல் செயல்பட்ட கடைகள்
இதையடுத்து காய்கறி மார்க்கெட்டுகள் நேற்று முதல் கடலூர் பஸ் நிலையத்திலும், மஞ்சக்குப்பம் மைதானத்திலும், கடலூர் முதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகிலும் செயல்பட தொடங்கியது. அங்கு வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து கடைகள் அமைத்திருந்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். இந்நிலையில் மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட்டில் இருந்த சில காய்கறி கடைகள் மட்டும் இடமாற்றம் செய்யப்படாமல் வழக்கம்போல் அதே இடத்திலேயே செயல்பட்டன.