உண்டியல் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய மாணவி
தந்தையின் நினைவாக ஆதரவற்றோருக்கு உணவு வழங்க சேமித்த உண்டியல் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய மாணவியை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் பாராட்டினார்.
தஞ்சாவூர்;
தந்தையின் நினைவாக ஆதரவற்றோருக்கு உணவு வழங்க சேமித்த உண்டியல் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய மாணவியை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் பாராட்டினார்.
பாராட்டு சான்றிதழ்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே நாடாகாடு கிராமத்தை சேர்ந்தவர் திருநீலகண்டன். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி. இவர்களது ஒரே மகள்சாம்பவி (வயது12). இவர் பேராவூரணியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருநீலகண்டன் மின்சாரம் தாக்கி இறந்தார். கணவர் இறந்த பிறகு பாக்கியலட்சுமி தான் பார்த்து வந்த ஆசிரியை பணியை விட்டுவிட்டு தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நிவாரணம்
கடந்த 2018-ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கியபோது ஏராளமான தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. பாக்கியலட்சுமி தோப்பில் நின்ற தென்னை மரங்களும் முறிந்து விழுந்தது. இதற்கு நிவாரணமாக தமிழக அரசு ரூ.1.5 லட்சத்தை வழங்கியது. இந்த நிவாரண நிதியை தான் வைத்து கொள்ளாமல் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவிகள் விளையாட கைப்பந்து மைதானத்தை பாக்கியலட்சுமி அமைத்து கொடுத்தார். இதற்காக குடியரசு தினத்தன்று பாக்கியலட்சுமிக்கு பாராட்டு நற்சான்றிதழை கலெக்டர் கோவிந்தராவ் வழங்கி கவுரவித்தார்.
தாயை போல் மகள்
பாக்கியலட்சுமியின் மகள் சாம்பவியும் உண்டியலில் தாய் மற்றும் உறவினர்கள் வழங்கும் தொகையை சேமிக்கும் பழக்கம் உடையவர். ஒவ்வொரு ஆண்டும் தான் சேமித்த தொகையை, தன்னுடைய தந்தையின் நினைவு தினத்தில் ஆதரவற்றோருக்கு உணவு வாங்கி கொடுத்து வந்தார்.
தற்போது கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளின்படி, மாணவி சாம்பவி, தன் தாயுடன் நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மாவட்ட கலெக்டர் கோவிந்தராவிடன் தன்னுடைய சேமிப்பு தொகையான ரூ.8,300-யை வழங்கினார்.
அப்போது சாம்பவியின் செயலை கலெக்டர் பாராட்டியதோடு, மாணவி படிக்க விரும்பிய மருத்துவர் படிப்பை படிக்க வாழ்த்தியும், தாயை போல் மகளும் பிறருக்கு உதவும் குணம் கொண்டதையும் பாராட்டினார்.