மொரப்பூர் அருகே பயங்கரம்: நகைக்காக பாட்டியை கொன்ற என்ஜினீயரிங் மாணவர் கைது
நகைக்காக பாட்டியை கொன்ற என்ஜினீயரிங் மாணவர் கைது
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே, நகைக்காக பாட்டியை கொன்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கொலை
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே ராணிமூக்கனூர் ஊராட்சி வீரராகவபுரத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியரின் மனைவி சிவகாமி (வயது 70). இவர் கடந்த 11-ந் தேதி இரவு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இருந்தார். இதுகுறித்து அவரது மகள் தேவி மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ் குமார், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை, அரூர் துணை சூப்பிரண்டு தமிழ்மணி ஆகியோர் சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனிப்படை
இந்த கொலையில் துப்புதுலக்க அரூர் துணை சூப்பிரண்டு தமிழ்மணி தலைமையில் மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, பாப்பிரெட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், கடத்தூர் இன்ஸ்பெக்டர் ஜெய்சன்குமார் ஆகியோர் தலைமையில் சுமார் 60 போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் போலீசார் கொலையாளியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொலையான சிவகாமியின் உறவினரான கிஷோர் (19) என்பவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது முகத்தில் காயங்கள் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
போலீசில் கிஷோர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான் வேலூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு ஐ-போன் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் எனது நண்பர்களிடம் கடனாக பணத்தை பெற்று ஐபோன் வாங்க இன்டர்நெட் மூலம் ஆர்டர் செய்தேன். ஆனாலும் ஐ-போன் எனக்கு வரவில்லை. இதனால் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தேன்.
அதே நேரத்தில் நண்பர்கள் கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டனர். இந்த நிலையில் பணத்தை நான் எப்படி திருப்பி கொடுப்பது? என்று யோசித்தேன். எனது பாட்டி உறவான சிவகாமி கழுத்தில் எந்நேரமும் நகை அணிந்து கொண்டிருப்பார்.
நகைக்காக கொலை
இதனால் அவரை கொலை செய்து நகையை எடுத்து விற்று கடனை தீர்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். இதற்காக கடந்த 11-ந் தேதி இரவு சுமார் 10 மணிக்கு மேல் எனது பாட்டி சிவகாமி வீட்டிற்கு சென்று கதவை தட்டினேன். பாட்டி கதவை திறந்ததும் அவரை இரும்பு கம்பியால் அடித்து காயம் ஏற்படுத்தினேன். அவரும் இரும்பு கம்பியால் என் முகத்தை பார்த்து அடித்தார். அதன் பிறகு நான் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து விட்டார்.
பின்னர் அவர் கழுத்தில் இருந்த 6½ பவுன் தங்க செயினை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று விட்டேன். போலீசார் என் மீது சந்தேகம் அடைந்து விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கிஷோரை போலீசார் கைது செய்து அரூர் குற்றவியல் நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். நகைக்காக பாட்டியை பேரனே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படு்த்தி உள்ளது.