படுக்கை வசதி விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். கலெக்டர் அறிவுறுத்தல்
கொரோனா கட்டுப்பாடு மற்றும் கட்டளை அறை மூலம் மருத்துவமனை படுக்கை வசதி விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டுமென கலெக்டர் சிவன்அருள் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பத்தூர்
கட்டுப்பாட்டு அறை
திருப்பத்தூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா கட்டுப்பாட்டு அறை மற்றும் கட்டளை அறையில் பணிபுரியும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள்குறித்து கலெக்டர் சிவன்அருள் கூறியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை உரிய முறையில் கிடைக்கவும், நோயாளிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா கட்டுப்பாட்டு அறை மற்றும் கட்டளைஅறை (வார்ரூம்) செயல்படுகிறது.
உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்
1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு நோயின் தாக்கம், ஆக்சிஜன் அளவு குறித்து நோயாளிகள் தெரிவித்தால், மருத்துவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிசன் படுக்கை வசதிகளுடன் கூடிய படுக்கை வசதி, ஐ.சி.யு. பிரிவு காலியாக உள்ள இடங்கள் குறித்து உடனுக்குடன் நோயாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்தப் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பொதுமக்கள், நோயாளிகள் தொலைபேசியில் தெரிவிக்க கூடிய புகார்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனக் கூறினார்.