மருத்துவ அவசரம் என பொய்யாக ‘இ-பதிவு’ செய்ய வேண்டாம்

மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் வாகன சோதனை நடக்கிறது என்றும், மருத்துவ அவசரம் என பொய்யாக இ-பதிவு செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-05-21 17:27 GMT
நாகர்கோவில்:
மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் வாகன சோதனை நடக்கிறது என்றும், மருத்துவ அவசரம் என பொய்யாக இ-பதிவு செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரே நாளில் 2,749 வழக்குகள் பதிவு
கொரோனாவை கட்டுப்படுத்த குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக ஊரடங்கை மீறியதாக மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் ஒரே நாளில் முககவசம் அணியாத 648 பேருக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 127 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த 344 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டிய 1,630 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 2,749 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு பிரசாரம்
நேற்று காலையில் இருந்து சுசீந்திரம் ஆனைப்பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்கள், கார்கள், ஆட்டோக்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இ-பதிவு வைத்திருந்தவர்களை மட்டுமே விடுவித்தனர். மற்றவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
மேலும், போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதிலும் உள்ள 33 போலீஸ் நிலைய பகுதிகளிலும் ஊரடங்கு தொடர்பான விழிப்புணர்வு வாகன பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாகனங்கள் ஒப்படைப்பது எப்போது?
இந்தநிலையில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஒரு போலீஸ் நிலைய எல்லையில் இருந்து மற்றொரு போலீஸ் நிலைய எல்லைக்குள் செல்ல வேண்டாம். 
ஊரடங்கை மீறியதாக இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படுவதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் நிலைய அளவில் திரும்ப ஒப்படைக்க முடியாது. கோர்ட்டு நடவடிக்கை மூலம் தான் திரும்ப வழங்க முடியும். அல்லது அரசு சார்பில் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்குவார்கள். அதில் வாகனங்களை எப்படி கொடுக்கலாம்? யாரிடம் கொடுக்கலாம்? என்று அறிவிக்கப்படும். அதன்படி வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும். எனவே தேவையின்றி யாரும் போலீஸ் நிலையங்களுக்கு வர வேண்டாம். 
பொய்யாக ‘இ-பதிவு’ செய்ய வேண்டாம்
வெளி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வருவதற்கு  நேற்று முன்தினம் மட்டும் 1,500 பேர் ‘இ-பதிவு’ கோரியிருக்கிறார்கள். அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 2,500 பேர் மருத்துவ அவசர தேவைக்காக ‘இ-பதிவு’ கோரி அனுமதி பெற்றிருக்கிறார்கள். மருத்துவ அவசரம் என்ற பெயரில் யாரும் பொய்யாக ‘இ-பதிவு’ பெற்று வெளியில் சுற்ற வேண்டாம். இதனால் எங்களுக்கு சந்தேகம் ஏற்படத் தொடங்கும். அதன்பின்னர் உண்மையாகவே மருத்துவ தேவைக்காக செல்லக்கூடியவர்களைக் கூட சந்தேகிக்க தோன்றும். இதனால் அவர்களுக்கு சிரமம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்