புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் நியமனம்
புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக லட்சுமி நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இந்த கூட்டணியின் தலைவர் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான என்.ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
இதற்கிடையில் அவருக்கு கொரோனா தொற்று உறிதி செய்யப்பட்டதால் கடந்த மே 9 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே சமயம் புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தற்காலிக சபாநாயகரை நியமிக்கும் கடிதத்தை ஆளுநர் தமிழிசைக்கு முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
அண்மையில் கொரோனா சிகிச்சை முடிந்து ரங்கசாமி வீடு திரும்பிய நிலையில், துணை நிலை ஆளுநர் தற்போது லட்சுமி நாராயணனை தற்காலிக சபாநாயகராக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து புதுச்சேரி சட்டப்பேரவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி மாநில 15-ஆவது சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக முதல்வர் பரிந்துரையின் பேரில், ராஜ்பவன் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க. லட்சுமி நாராயணனை, துணைநிலை ஆளுநர் நியமித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.