உருட்டுக்கட்டையால் அடித்து கொத்தனார் கொலை

வேளாங்கண்ணி அருகே கடனை திருப்பி கேட்டதால் உருட்டுக் கட்டையால் கொத்தனாரை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-21 16:46 GMT
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே கடனை திருப்பி கேட்டதால் உருட்டுக் கட்டையால் கொத்தனாரை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.10 ஆயிரம் கடன்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி போலீஸ் சரகம் வடவூர் தென்பாதி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 35). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் தனது மூத்த மகன் திருமணத்திற்காக குமாரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதில் ரூ.7,300-ஐ திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மீதி தொகையை குமார் கடந்த 13-ந் தேதி பக்கிரிசாமி வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் தற்போது பணம் இல்லை என்றும், பிறகு தருவதாகவும் தெரிவித்து உள்ளனர். 
அடித்துக்கொலை
இந்த நிலையில் சம்பவத்தன்று குமார் கடைத்தெருவிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பழைய பிள்ளையார் கோவில் வளைவில் திரும்பியபோது பக்கிரிசாமியின் இளைய மகன் சுந்தரபாண்டியன்(24) என்பவர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து குமாரிடம், எப்படி எங்களது வீடு தேடி பணம் கேட்க வந்தாய்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 
இந்த வாக்குவாதத்தின்போது சுந்தரபாண்டியன் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து குமாரின் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குமார் பரிதாபமாக இறந்தார்.
வாலிபர் கைது
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்