திண்டிவனம், செஞ்சி பகுதியில் பலத்த மழை மின்னல் தாக்கி சிறுவன் பலி

திண்டிவனம், செஞ்சி பகுதியில் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2021-05-21 16:43 GMT
திண்டிவனம்,

வெப்பசலனம் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடி-மின்னலுடனும், பலத்த சூறாவளி காற்றுடனும் பலத்த மழை கொட்டியது. மாலை 5 மணி வரை நீடித்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

மின்சாரம் தாக்கி பசுமாடு செத்தது

திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மேலும் இந்த மழையால் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திண்டிவனம் நகரில் மின் வினியோகம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

இதேபோல் செஞ்சியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் பெய்த பலத்த மழையால் காமதேனு திருமண மண்டப தெருவின் மேல்பகுதியில் சென்ற மின்கம்பி ஒன்று திடீரென அறுந்து கீழே விழுந்தது. அந்த சமயத்தில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த சிறுகடம்பூர் காலனியை சேர்ந்த ராஜி என்பவருக்கு சொந்தமான பசுமாடு செத்தது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மின் ஊழியர்கள் அறுந்து கிடந்த மின்கம்பியை சீரமைத்தனர்.

மின்னல் தாக்கி மாணவன் பலி

மேலும் இந்த மழையின்போது மின்னல் தாக்கி மாணவன் பலியானான். இது குறித்த விவரம் வருமாறு:-

திண்டிவனம் அருகே உள்ள சாலை கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவருடைய மகன் அரவிந்த்(வயது 12). திண்டிவனம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று மாலை தனது தந்தையுடன் வயலில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாடுகளை ஓட்டி வந்து கொண்டிருந்தான். அப்போது அங்கு மழை பெய்ததால், தந்தை-மகன் இருவரும் வயலில் உள்ள ஒரு தென்னை மரம் அருகே நின்றனர். அந்த சமயத்தில் அரவிந்த்தை மின்னல் தாக்கியது. தன்கண் முன்னே மின்னல் தாக்கியதில் மயங்கி விழுந்த மகனை பிரபு மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவனை டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, அரவிந்த் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மின்னல் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்