2 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறி

2 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறி

Update: 2021-05-21 15:18 GMT
கோவை

கோவையில் 2 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறி உள்ளதா? என்பது குறித்து சுகாதார துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

கருப்பு பூஞ்சை தொற்று

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் மியூகோர்மைகோசிஸ் (கருப்பு பூஞ்சை) தொற்று பரவுவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. 

இந்த தொற்று வடமாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்திலும் பரவி வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் பல்வேறு அறிவுறுத்தல்களை மாநிலங்களுக்கு வழங்கி உள்ளது.

இந்த நிலையில் கோவையை சேர்ந்த 45 வயது ஆண் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறி இருப்பதாக தெரியவந்து உள்ளது. இதய நோய் பாதிப்பு உள்ள அவர் தற்போது தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. 

இதேபோல் மற்றொருவரும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்து விட்ட தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுகாதார துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தடுப்பு மருந்து

இது குறித்து சுகாதார துறையினர் கூறியதாவது

ஸ்டீராய்டு சிகிச்சை பெறுவோர் மற்றும் சர்க்கரை நோய் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று காணப்படுகிறது. 

இந்த பாதிப்பு ஏற்பட்டால் கொரோனா நோயாளிகளுக்கு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும், சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. தலைவலி, காய்ச்சல், கண்களுக்கு கீழ் வலி மற்றும் பார்வை குறைபாடு ஏற்படுவது முக்கிய அறிகுறியாகும்.

கோவையில் 2 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் இருவரும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்கள். 

எனவே அந்த ஆஸ்பத்திரிகளிடம் விவரங்கள் கேட்டு உள்ளோம். மேலும் பரிசோதனை முடிவுகளும் கேட்டு உள்ளோம். அது வந்த பின்னரே அவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று உள்ளதா? இல்லையா என்று தெரியவரும்.

இந்த தொற்றுக்கு ஆம்போடெரிசின்-பி ஊசி தடுப்பு மருந்தாக பயன்படுகிறது. இந்த தடுப்பு மருந்து கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் இருப்பு வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்